ஆசியாவில் மோசடி நிலையங்களுக்கு ஏஐ உதவுகிறது: அனைத்துலக் காவல்துறை

ஆசியாவில் மோசடி நிலையங்களுக்கு ஏஐ உதவுகிறது: அனைத்துலக் காவல்துறை

2 mins read
b1f8963d-92a3-4ecd-8763-2c331225fdb2
மியன்மாரின் கிழக்கே உள்ள மியாவாடி நகரில் மோசடி நிலையங்களை முறியடிக்க கேரன் எல்லைப் பாதுகாப்புப் படை சென்ற ஆண்டு (2025) பிப்ரவரியில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட படம். - படம்: ஏஎஃப்பி

நோம்பென்: தென்கிழக்காசியாவில் செயல்படும் மோசடிக்காரர்கள், அதிவேகத்தில் பலரை ஏமாற்றுவதற்கு மலிவான செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) சாதனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் அரசாங்கங்கள், ஏமாற்றுச் சம்பவங்களை முறியடிக்க முயற்சி செய்யும் நிலையில் அத்தகைய சாதனங்கள் மோசடி நிலையங்களுக்குக் கைகொடுப்பதாக அனைத்துலகக் காவல்துறை (இன்டர்போல்) அமைப்பின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர், சில மோசடிகளைத் தரம் குறைந்த இணைய விளம்பரங்களின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். காதல் அல்லது முதலீட்டுத் திட்டங்கள் மூலம் ஆசை காட்டும் மோசடிகளையும் கண்டுபிடித்துவிட முடியும்.

ஆனால் மோசடிக்காரர்கள் இப்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைக் கொண்டு ஏமாற்று வேலைகளை நூதனமான முறையில் நடத்துகின்றனர். திட்டத்தை விரைவில் மாற்றிப் புதியவர்களைக் குறிவைக்கவும் புதிய இடங்களிலிருந்து மோசடிகளை நடத்தவும் செயற்கை நுண்ணறிவு அவர்களுக்கு உதவுகிறது.

“மோசடி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. குற்றம் புரிவோரின் செயல்களை அது எளிதாக்கவிருக்கிறது,” என்று சிங்கப்பூரில் உள்ள அனைத்துலகக் காவல்துறை அமைப்பின் நிபுணர் நீல் ஜெட்டன் கூறினார். குரலை நகலெடுக்கவும் ஒருவரைப் போன்ற உண்மையான படங்களை விரைவாக உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு அவர்களுக்கு உதவுகிறது என்றார் முனைவர் ஜெட்டன்.

கம்போடியாவில் செயல்படும் மோசடி நிலையங்களுக்கு எதிராக அந்நாடு அண்மையில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவை அவை பயன்படுத்துவது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்கா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் நெருக்குதல் அளித்ததைத் தொடர்ந்து கம்போடியாவின் நடவடிக்கை வந்துள்ளது.

அனைத்துலகக் குற்றக்கும்பலின் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் சென் ‌ஷி, கம்போடியாவில் கைதுசெய்யப்பட்டு, சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் அமெரிக்காவில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். மியன்மாரில் மோசடி நிலையங்களுடன் தொடர்புடைய 11 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக பெய்ஜிங் அண்மையில் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்