சிட்னி: ஆஸ்திரேலியாவின் இணையப் பாதுகாப்பு அமைப்பு, செயற்கை நுண்ணறிவு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓர் அச்சுறுத்தலாக உருமாறக்கூடும் என்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) எச்சரித்துள்ளது.
கணினிக் கட்டமைப்புகளையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் ஊடுருவும் நோக்கில் வெளிநாட்டு அரசாங்கங்கள் அதைப் பயன்படுத்தக்கூடும் என்று அந்த அமைப்பு சுட்டியது.
துரிதமாக வளர்ச்சியடையும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் நன்மைக்காகப் பயன்படுத்தப்பட்டால் மிகப் பெரிய பலனைத் தரும் என்று ஆஸ்திரேலியச் சமிக்ஞை இயக்குநரகம் குறிப்பிட்டது.
தனது வருடாந்தர இணைய அச்சுறுத்தல் அறிக்கையைத் தயாரிக்கச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் சுட்டியது.
ஆனால், அண்மைய மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவிலான இணைய ஊடுருவல்களைச் செயல்படுத்தக் குற்றவாளிகளுக்கும் அரசாங்க ஆதரவு பெற்ற ஊடுருவிகளுக்கும் செயற்கை நுண்ணறிவு எந்த அளவு உதவியிருக்கிறது என்பதையும் காண முடிந்ததாக இயக்குநரகம் அறிக்கையில் குறிப்பிட்டது.
“அண்மை வாரங்களில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் புதிய அச்சுறுத்தல்கள் எழுந்தன,” என்றது அமைப்பு.
முன்னணி நிறுவனங்களான ஓப்பன்ஏஐ, ஆந்த்ரோப்பிக் ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் தன்னிச்சையாக ஊடுருவல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததால் அதிநவீன செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் ஆற்றல் குறித்த கவலையும் அச்சமும் அனைத்துலக அளவில் மேலோங்கியிருப்பதாக அமைப்பின் அறிக்கை தெரிவித்தது.
இணையப் பாதுகாப்புச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்திருப்பதையும் அது எடுத்துக்காட்டியது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சமிக்ஞை இயக்குநரகம், உத்தேச ஊடுருவல் நடவடிக்கைகள் குறித்து 4,400க்கும் அதிகமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
“வெளிநாட்டு அரசாங்கத்தின் ஆதரவுபெற்ற இணைய ஊடுருவிகள் ஆஸ்திரேலிய அமைப்புகளின் சர்ச்சைக்குரிய தகவல்களைப் பெற முயல்கின்றனர்,” என்று இயக்குநரகம் சொன்னது.
