வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகாசில் ஜூன் 2024ல் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அப்போதைய வேட்பாளரான டோனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது அதிபர் ஆட்சிக் காலத்தை வரையறுக்கப்போகும் தொழில்நுட்பத்தின் ஒரு முன்னோட்டத்தைக் கண்டார்.
ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரான கிரெக் புரோக்மேன், அப்போதைய அதன் தலைமை நிர்வாக அதிகாரியான பிராட் லைட்கேப் ஆகிய இருவரும், ஏஐ நிறுவனத்தின் காணொளியை உருவாக்கும் ‘சோரா’ கருவியின் முன்னோட்டப் பதிப்பை அவருக்குக் காட்டினர். அந்தச் சந்திப்பை அறிந்த பெயர் வெளியிட விரும்பாத நபர்களின் கூற்றுப்படி, டிரம்ப்பும் புரோக்மேனும் நிலவில் ஒரு கோல்ஃப் மைதானம் இருப்பது போல் காட்சிப்படுத்த அக்கருவியைப் பயன்படுத்தினர்.
ஆனால், அந்தச் சந்திப்பு மிகவும் தீவிரமான ஒரு கட்டத்தை எட்டியது. அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய தேசிய பாதுகாப்புக் கவலையை எழுப்பினார். வெளிநாட்டு எதிரிகள் தன்னைப்போல் போலியாக உருவாக்க ஏஐயைப் பயன்படுத்தினால் என்ன செய்வது என்று அவர் கேள்வியெழுப்பியதாகத் தெரிகிறது. அதற்கு அத்தகைய அபாயங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இருப்பதாக புரோக்மேனும் லைட்கேப்பும் அவருக்கு உறுதி அளித்தனர்.
கட்டுப்பாடற்ற ஏஐ மாதிரிகளால் ஏற்படும் விவரிக்க முடியாத பாதுகாப்பு கவலைகளுக்கு இடையே அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள ஒரு தொழில்நுட்பத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏஐ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், முன்னறிவிப்பு செய்ய முடியாத இணையப் பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்வதற்கும் இடையே சமநிலையைக் காண முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
செப்டம்பரில் வாஷிங்டனில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நடக்கவிருக்கும் உச்சமாநாட்டிற்கு டிரம்ப் செல்லவுள்ள நிலையில், அதில் ஏஐ பாதுகாப்பு ஒரு முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவால் மனித இனம், அடுத்த பத்து ஆண்டுகளின் இறுதிக்குள் அழிவதற்கு 10 விழுக்காடு அபாயம் இருந்தால்கூட அது ‘ஏற்றுக்கொள்ள முடியாது’ என்ற பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டி, 2026ல் ஓப்பன்ஏஐ நிறுவனம், பங்குச்சந்தைக்குப் போகாது என்று அதன் தலைமை நிர்வாகி சேம் ஆல்ட்மேன் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்குப் போட்டியான ஆந்த்ரோபிக்கைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள், வேகமாக வளர்ந்து வரும் ஏஐ வெகுவிரைவில் மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று கடுமையான எச்சரிக்கைகளை விடுத்ததைத் தொடர்ந்து, ஏஐ அமைப்புகளைக் கட்டுப்படுத்த புதிய விதிகளை இயற்றுமாறு அமெரிக்க சட்டம் இயற்றுபவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தால் மனித இனம் அழிவதற்கு 10% வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, அத்தகைய மதிப்பீட்டை எவ்வாறு செய்யமுடியும் என்று தமக்குத் தெரியவில்லை என்று கூறிய ஆல்ட்மேன், ஏஐ நிறுவனங்களும் அரசாங்கங்களும் இதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆபத்தாகக் கருதி செயல்படும் அளவுக்கு இந்த அபாயம் தீவிரமானது என்றார்.
“அது, 10 விழுக்காடோ, எட்டு விழுக்காடோ அல்லது ஆறாகவோ இருந்தாலும் இதில் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இதில் சுயநலமோ, லாபத்தையோ அல்லது வேறு எதையும் குறுக்கிட அனுமதிக்கக் கூடாது,” என்று ஆல்ட்மேன் மேலும் தெரிவித்தார்.

