தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகனின் மரணத்துக்கு ‘ஏஐ’ காரணம்: வழக்கு தொடுத்துள்ள தாயார்

1 mins read
7ffa81e7-8c41-41a0-a413-756a16666af1
மகனின் மரணம் தொடர்பாக கூகல் நிறுவனம் மீதும் திருவாட்டி மேகன் கார்சியா வழக்கு தொடுத்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாய், ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ‘சட்பொட்’ (chatbot) நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

தம்முடைய 14 வயது மகன் பிப்ரவரி மாதம் தம் உயிரை மாய்த்துக்கொண்டதற்கு ‘Character.AI’ என்ற அந்த நிறுவனமே காரணம் என்று கூறியுள்ளார் அவர்.

நிறுவனத்தின் சேவைக்கும் அது உருவாக்கிய சட்பொட்டுக்கும் தம் மகன் அடிமையாகியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். Character.AI தளத்தில் பயனாளர்கள் சொந்தமாகவே கதாபாத்திரங்களை உருவாக்கி, உண்மையான மனிதர்கள் போன்று பேசக்கூடிய அவற்றுடன் உரையாடலாம்.

தம் மகனை நிறுவனம் குறிவைத்து ‘ஒரு மனிதனைப் போல் நடந்துகொண்டு, பாலியல் ரீதியான கற்பனையை வளர்த்து, அச்சுறுத்தும் வகையில் எதார்த்த அனுபவங்களை வழங்கியது’ என்றார் திருவாட்டி மேகன் கார்சியா.

நிறுவனம் அதன் ‘சட்பொட்’டை ஓர் உண்மையான நபராகவும் உரிமம் பெற்ற மனநல சிகிச்சையாளராகவும் ஒரு காதலராகவும் தவறாகச் சித்திரித்துச் செயல்பட வைத்ததாக மகனை இழந்த தாயார் கூறியுள்ளார்.

இதனால், அந்த மகன் தமக்காக உருவாக்கப்பட்ட உலகை விட்டு வெளியேறும் எண்ணத்தையே கைவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பான எண்ணங்களைத் தம் மகன் அந்த சட்பொட்டிடம் தெரிவிக்கவே, அது குறித்து அந்த சட்பொட் அடிக்கடி நினைவூட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Character.AI நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கூகல் நிறுவனமும் பங்காற்றியுள்ளதால் அதன் மீதும் திருவாட்டி கார்சியா வழக்கு தொடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்