ஏஐ பாதுகாப்பு: அமெரிக்கா, சீனா பேச்சு

ஏஐ பாதுகாப்பு: அமெரிக்கா, சீனா பேச்சு

படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2026 - 12:57 pm

2 mins read

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள உச்சநிலை மாநாட்டிற்கு முன்பாக அமெரிக்கத் தரப்பு, புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதுகாப்புக் குறித்து அறிவிக்கும் கட்டமைப்பொன்றை முன்மொழிந்துள்ளது.

அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட்டும் சீனத் துணைப் பிரதமர் ஹி லிஃபெங்கும் நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடத்திய பேச்சின் முடிவில் அமெரிக்கத் தரப்பு அதன் பரிந்துரையை முன்வைத்தது.

புதிய அமெரிக்க-சீனச் செயற்கை நுண்ணறிவு உரையாடலைத் தொடங்குவது குறித்து இரு தரப்பும் விவாதித்ததாகத் திரு பெசன்ட் சொன்னார்.

தேசியப் பாதுகாப்பு நிலைக்குச் செல்லும் ஏஐ தொடர்பான சம்பவங்களை உள்ளடக்கிய, பொதுவான இலக்குகள், அச்சுறுத்தல்களை அறிவிக்கும் கட்டமைப்புடன் கூடிய தேசியப் பாதுகாப்பு அக்கறைகள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“எல்லை கடந்த எந்தவொரு நடவடிக்கையையும் போலவே, உலகின் முதல் இரண்டு முன்னணி ஏஐ வல்லரசுகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மையற்ற நிலையிலிருந்து அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்,” எனத் திரு பெசன்ட் கூறினார்.

திரு டிரம்ப்பும் திரு ஸியும் இவ்வாண்டு மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது ஏஐ வளர்ச்சி குறித்த சாத்தியமான ஆலோசனைகள் பற்றி முதன்முதலில் விவாதித்தனர்; ஆனால் அவை முறைப்படுத்தப்படவில்லை.

ஏஐ தொடர்பான உரையாடல் உட்பட முக்கியப் பொருளியல், வர்த்தக விவகாரங்களில் சீனாவும் அமெரிக்காவும் திறந்தமனத்துடன், ஆழமான, ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்ததாகச் சீன அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன.

அதிநவீன ஏஐ சில்லுகள், பகுதிமின்கடத்திகளை உற்பத்தி செய்வதற்கான கருவிகள் மீதான அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், ஏஐ பேச்சுகளுக்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் கூறினார்.

செப்டம்பர் 24, 25ஆம் தேதிகளில் வாஷிங்டனில் இரு நாடுகளின் அதிபர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள உச்சநிலை மாநாட்டிற்கு இந்தப் பேச்சுகள் அடித்தளம் அமைக்கும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காநிதிஅமைச்சர்சீனாதுணைப் பிரதமர்வர்த்தகம்ஏஐசெயற்கை நுண்ணறிவுபாதுகாப்பு