புக்கெட் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க சிங்கப்பூரைப் போன்று ‘ஏஐ’ தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆய்வு

2 mins read
d31ba2e4-99b3-4365-8910-52db3cdb722f
புக்கெட்டில் வரிசை பிடித்து நிற்கும் வாகனங்கள். - கோப்புப் படம்

புக்கெட்: போக்குவரத்து நெரிசல் புக்கெட்டின் தீராத தலைவலியாக இருந்து வருகிறது.

இதனைச் சமாளிக்க புக்கெட் ஆளுநர் சோபோன் சுவன்னாரட் கடந்த பிப்ரவரியில் இரண்டு முக்கிய உத்திகளை வெளியிட்டிருந்தார்.

2030ஆம் ஆண்டுவாக்கில் நெடுஞ்சாலை பாதையைத் திறப்பது அவற்றில் ஒன்று.

புதிய நெடுஞ்சாலைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஆளுநர் கூறினார்.

இந்த நெடுஞ்சாலை முவாங் மாயை கோ காயவ்வுடன் இணைக்கும். பின்னர் காத்துவிலிருந்து பொத்தோங் கடற்கரை வரை சுரங்கப்பாதைகளை உள்ளடக்கி காத்து வரை விரிவுபடுத்தப்படும்.

நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த செலவு 60 பில்லியன் பாட் (S$2.37 பி.) என மதிப்பிடப்பட்டுள்ளது. 2029ல் கட்டுமானப் பணி முடிவடைந்து 2030ல் செயல்படத் தொடங்கவிருக்கிறது.

“தற்போது புக்கெட்டின் போக்குவரத்து நெரிசல் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் நெரிசல் மெதுவடைவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு உதவும்,” என்று ஆளுநர் சோபோன் குறிப்பிட்டார்.

மற்றொரு உத்தி, புக்கெட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்தை நிர்வகிக்க ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது. சிங்கப்பூரின் ஏஐ கட்டமைப்பு முயற்சியைப் போன்று இது செயல்படுத்தப்படும்.

புக்கெட்டில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தவும் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கவும் சாலைச் சந்திப்புகளில் ஆய்வு நடத்தப்பட்டன. 400 மில்லியன் பாட் செலவிலான ஏஐ முயற்சியால் போக்குவரத்து நெரிசல் 30 முதல் 40 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாலைக் கட்டமைப்புக்கு மத்திய கட்டுப்பாட்டு நிலையம் மூளையாகச் செயல்படும். புக்கெட்டில் உள்ள 85 சாலைச் சந்திப்புகளை இது நிர்வகிக்கும். கேமராவில் பதிவாகும் காட்சிகள் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டு போக்குவரத்து மேம்படுத்தப்படும் என்று ஆளுநர் விளக்கினார்.

சிங்கப்பூர் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க நிலப் போக்குவரத்து ஆணையத்தின்கீழ் ‘விவேகமான நடமாட்டம் 2030’ என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இம்முயற்சிக்கு ஏஐ தொழில்நுட்பம் பிரதானமாக இருக்கும். 2006ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்முயற்சி, அதிகப்படியான உள்கட்டமைப்பு விரிவாக்கம் இல்லாமல் திறமையான, சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யும்.

குறிப்புச் சொற்கள்