‘ஏஐ’ பயனீட்டாளர் எண்ணிக்கை 700 மில்லியனைக் கடந்தது: சீனா

‘ஏஐ’ பயனீட்டாளர் எண்ணிக்கை 700 மில்லியனைக் கடந்தது: சீனா

படம்: ராய்ட்டர்ஸ்

29 Sep 2026 - 9:32 pm

2 mins read

பெய்ஜிங்: சீனாவில் ஜெனெரேடிஃப் செயற்கை நுண்ணறிவுப் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாத நிலவரப்படி 700 மில்லியனைக் கடந்துவிட்டதாக அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை 602 மில்லியனாக இருந்தது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) சீனாவில் நடைபெற்ற 7வது இணைய உள்கட்டமைப்பு வளங்கள் மாநாட்டில் சீனாவின் இணையக் கட்டமைப்பு தகவல் நிலையத்தின் கொள்கை, அனைத்துலக ஒத்துழைப்புக் கழகம் அறிக்கை வெளியிட்டது.

அதன்படி, இணையத்தளங்களைப் பயன்படுத்துவோரில் கிட்டத்தட்ட 76 விழுக்காட்டினர் கேள்வி, பதில் காரணங்களுக்காகச் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து படங்கள், காணொளிகள், கூட்டக் குறிப்புகள் ஆகியவற்றை உருவாக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

அலுவலகத்திற்கான செயற்கை நுண்ணறிவுத் துணைக் கருவிகள், உற்பத்திக் கருவிகள் ஆகியவற்றின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 100 விழுக்காட்டுக்கும் மேல் வளர்ந்துள்ளதை அறிக்கை சுட்டியது.

கூடுதலாக, சீனாவில் உள்ள இணையத்தளப் பயனீட்டாளரில் கிட்டத்தட்ட 38.7 விழுக்காட்டினர் கடந்த ஆறு மாதங்களில் அறிவார்ந்த வன்பொருள் கருவிகளை இணையம்வழி வாங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான துறையில் சீனா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, சீனாவில் 10,740 நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பெரிய மாதிரிகள், செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், இயந்திர மனிதக் கருவிகள் ஆகியவை உள்ளன.

அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பெய்ஜிங், ‌‌‌ஷாங்காய், குவாங்டொங், ஜியாங்சு, செஜியாங் ஆகியவற்றில் உள்ளன.

தொழில்நிறுவனங்கள் ஆரோக்கியமான, சீரான, நிலையான வளர்ச்சிக்கான நிறுவனப் பாதுகாப்புகளை உறுதிசெய்வதற்காக, சீனா எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுசீனாபயனீட்டாளர்