நிதி உதவி குறைப்பினால் குழந்தைகள் தடுப்பூசித் திட்டம் பாதிப்பு

2 mins read
b7baebb5-d0f7-4f19-ac68-601b6302b7eb
ஆப்கானிஸ்தான், காபூலில் போலியோவுக்கு எதிரான சொட்டு மருந்து ஒரு குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது. ஐந்து வயதுக்குக் குறைந்த 11.6 மில்லியன் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கும் நாடளாவிய இயக்க்ததை ஆப்கான் சுகாதார அமைச்சு ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கியது. - படம்: இபிரே

லண்டன்: உலகளாவிய நிதி உதவிக் குறைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் திட்டங்களைப் பாதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நோய்த் தடுப்புத் திட்டத்தில் கிட்டத்தட்ட கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்தியதைப் போன்ற அபாயத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று அது குறிப்பிட்டது. தட்டம்மை, மூளைக்காய்ச்சல் (meningitis), மஞ்சள் காமஆலை உள்ளிட்ட தொற்று நோய்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், நிதி உதவிக் குறைப்பு காரணமாக ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அவசரகால நிலை மற்றும் வழக்கமான தடுப்பூசித் திட்டங்கள் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 108 உலக சுகாதார நிறுவன அலுவலகங்களின் அறிக்கைகள் இதனைத் தெரிவித்துள்ளன.

மேலும், நிதியுதவிக் குறைப்பு நோய்த் தடுப்பு மருந்து விநியோகத்தையும் குறைத்ததுடன், நோய்க் கண்காணிப்பையும் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) நோய்த் தடுப்பு மருந்து கூட்டணி (காவ்வி) ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஒரு தலைமுறைக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் மிகப்பெரிய பின்னடைவை கொவிட்-19 ஏற்படுத்தியது. அத்தகைய அபாயத்தை, முன்னர் உலகின் ஆக அதிகளவில் நன்கொடை வழங்கும் நாடாக இருந்த அமெரிக்காவின் நிதி அளிப்பு குறைப்பு ஏற்படுத்தியுள்ளதாக கூட்டறிக்கை கூறியது.

2026-2030ஆம் ஆண்டு வரையிலான தனது பணிகளுக்காக யுஎஸ் 9 பில்லியன் டாலரை (11.83 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) தேவை என நோய்த் தடுப்பு மருந்து கூட்டணி தெரிவித்துள்ளது.

2021 முதல் ஆண்டுக்கு ஆண்டு தட்டம்மைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2024ல் ஆப்பிரிக்காவில் மூளைக் காய்ச்சல் அதிகரித்தது என்று அமைப்புகள் தெரிவித்தன.

‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையின்படி வெளிநாட்டு உதவியை ஒழுங்குபடுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் காவ்வி அமைப்புக்கு வழங்கும் US$300 மில்லியன் நிதியுதவியை ரத்து செய்வதுடன் ஐநா குழந்தைகள் நிதி, உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி உதவிகளையும் குறைக்கும் என்பதை அமெரிக்க அரசாங்கத்தின் உள்சுற்று ஆவணம் ஒன்று சுட்டியது.

குறிப்புச் சொற்கள்