எங்கள் உதவி கடலின் ஒரு துளியே: மருத்துவ உதவிப் பணியாளர்கள்

2 mins read
216c5e28-869a-4d8a-a9c0-25eef834c01a
இஸ்‌ரேலிய தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீனச் சிறுவன். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸாவின் மனிதாபிமானத் தேவைகளுக்கு மருத்துவ உதவிப் பணியாளர்கள் சிறிதளவே உதவ முடியும் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) கூறியுள்ளனர்.

போர் தொடங்கி கிட்டத்தட்ட 15 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் காஸாவில் நிலவரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

மருத்துவப் பணியாளர்களுக்கும் மருந்துப் பொருள்களுக்கும் பற்றாக்குறை, உதவியை அனுமதிக்க மறுக்கும் இஸ்‌ரேல், ராணுவ நடவடிக்கைகளால் சேதம், அபாயம் எனப் பல நெருக்கடிகள் எழுந்துள்ளன.

இதனால், காயங்களுக்குச் சிகிச்சை நாடுவதும் அன்றாடப் பாரமரிப்பை வழங்குவதும் நோய்ப்பரவலைத் தடுப்பதும் அதிகரித்துவரும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டைச் சமாளிப்பதும் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன.

“எங்களால் குறைந்தளவு தாக்கமே ஏற்படுத்த முடியும். ஏனெனில், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேருக்குச் சுகாதாரப் பராமரிப்பு தேவைப்படும் நிலை அங்கு உருவாகிவிட்டது,” என்றார் காஸாவுக்கு எம்எஸ்எஃப் பணிக்காகச் சென்றுவந்த தீவிர சிகிச்சைப் பிரிவு தாதி, என்ரிகோ வல்லபெர்டா.

“அங்கு உள்ள தேவைகளுடன் ஒப்பிட்டால், உண்மையில் நாங்கள் செய்வது கடலின் ஒரு துளியே,” என்று கைரோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

வடகாஸாவுக்கு 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் எம்எஸ்எஃப் அமைப்பால் உதவி வழங்க முடியாமல் போனது. மேலும், காஸா எல்லைப்பகுதிகளை அணுக அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இஸ்‌ரேல் மறுத்தும் விடையளிக்காமலும் இருந்து வந்துள்ளது.

இதனைத் தெரிவித்த எம்எஸ்எஃப் அவசரகால ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ஓட்டன்ஸ்-பேட்டர்சன், “பேரழிவுக்கான சூழ்நிலை உருவாகிவிட்டதால் மனிதாபிமான உதவியை இடையூறு இன்றி முடிந்தவரை சீக்கிரம் வழங்கும் சூழல் எங்களுக்குத் தேவைப்படுகிறது. நாங்கள் சீராகப் பணியாற்றுவதற்குப் போர் நிறுத்தமும் தேவை,” என்றார்.

இதற்கிடையே, காஸாவில் நிலைமை சீரானதும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் மக்களிடையே தலைதூக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வல்லபெர்டா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்