ஜனவரி 28ம் தேதி ஹாங்காங் நகருக்கு பூசானிலிருந்து தாமதமாக புறப்படவிருந்த ஏர் பூசான் விமானத்தில் பயணிகள் பொருட்கள் வைக்கும் இடது வரிசை இருக்கைகளுக்கு மேல் உள்ள தொட்டியில் தீ கண்டறியப்பட்டது.
பயன்படுத்தாத கையடக்க மின்னூட்டியின் உற்சாதனம் பழுதாகி அதனால் தீ ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தென் கொரிய போக்குவரத்து அமைச்சு மார்ச் 14 அன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
மின்னூட்டி எதனால் பழுதானது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
மடிக்கணினி, கைப்பேசி, மின்சிகரெட், கையடக்க மின்னூட்டி போன்றவற்றில் உள்ள லிதியம் பேட்டரிகள் உள்ள உட்சாதனங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும்போது ஏற்படக்கூடிய கோளாறுகளால் பழுதாகும்போது வெப்பம், புகை அல்லது தீயை வெளியாக்கும்.
தென்கொரியாவின் விமான ரயில் போக்குவரத்து விசாரணை ஆணையம் இவ்விபத்தை ஆராய்ந்து வருகிறது. அதன் முழு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த ஏர்பஸ் ஏ321 ரக விமானத்தில் இருந்த 170 பயணிகளும் ஆறு ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் முற்றிலும் தீக்கிரையாகி அழிந்துபோனது. சாம்பலாக மிஞ்சிய விமான பாகங்களில் தீ முதலில் காணப்பட்ட பகுதியில் கையடக்க மின்னூட்டியின் எரிந்துபோன துகள்கள் இருந்ததை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.