பேங்காக்: தாய்லாந்தின் புக்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானத்தை ஓடுபாதையிலிருந்து அகற்றுவதற்காகப் புதன்கிழமையன்று (மார்ச் 11) விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தத் திடீர் விமானக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முன் சக்கரம் சேதமடைந்தது எனத் தெரியவந்துள்ளது. இதனால் புக்கெட் விமான நிலையம் முடங்கியதுடன், அங்கு தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் பாதுகாப்பு கருதிப் பிற இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
ஹைதராபாத்திலிருந்து புக்கெட் சென்றடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கியபோது விமானக் கோளாறு காரணமாக அதன் சக்கரம் சேதமடைந்ததாக புக்கெட் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஓடுதளத்தில் நீண்ட சறுக்கல் தடம், நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
புக்கெட் விமான நிலையத்தில், விமானத்தின் முன் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டது. விமானிகள், விமானச் சிப்பந்திகள் ஆகியோர் அனைத்துத் தரநிலை நெறிமுறைகளையும் பின்பற்றினர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தாய்லாந்து நேரப்படி மாலை 6 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணி) ஓடுதளம் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக ‘தி நேஷன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான MCOT, அதன் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.
விமானத்தில் தரையிறங்கும் சாதனத்தில் சக்கரம் ஒன்று இல்லாததை அதில் பார்க்க முடிந்தது. விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கியதும் தார் சாலையில் நீண்ட சறுக்கல் தடம் இருப்பதையும் காண முடிந்தது.
ஏர் இந்தியாவின் மலிவுக் கட்டண விமானச் சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 100க்கும் மேற்பட்ட போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களைக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தொடர் பாதுகாப்புச் சர்ச்சைகள்: ஒரே ஆண்டில் 95 தொழில்நுட்பக் குறைபாடுகள்
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தியபடி, ஏர்பஸ் A320 விமானத்தின் இயந்திரப் பாகங்களை மாற்றாததற்காக இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரசைக் கண்டித்தது. மேலும், விதிமுறைகளைப் பின்பற்றியதாகக் காட்டும் வகையில் ஆவணங்களைப் போலியாகத் தயாரித்ததாகவும் அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 95 தொழில்நுட்பக் குறைபாடுகளைப் பதிவு செய்துள்ளது. இது இந்திய விமான நிறுவனங்களிலேயே இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
பிரதான நிறுவனமான ஏர் இந்தியா, கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஜூன் 2025ல் அகமதாபாத்தில் 260 பேர் பலியான விபத்துக்குப் பிறகு கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

