தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசரமாகத் தரையிறங்கியது

1 mins read
bc503435-ffe6-415d-9ee5-92d59db1fb6e
விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று அதனைச் சோதனையிட்ட பின்னர் தெரியவந்தது. - படம்: பெக்ஸெல்ஸ்

பேங்காக்: டெல்லியை நோக்கிப் பறந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தாய்லாந்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

தாய்லாந்துத் தீவான புக்கெட்டில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை புறப்பட்ட அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புக்கெட் விமான நிலையம் கூறியது.

தரையிறங்கிய அந்த ஏஐ 379 (AI 379) விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட பின்னர் விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

ஆயினும், வெடிகுண்டு எதுவும் விமானத்தில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புக்கெட் விமான நிலையத்தில் இருந்து காலை 9.30 மணியளவில் பறக்கத் தொடங்கிய விமானம், அந்தமான் கடலின் மேற்பரப்பில் பெரியதொரு வட்டமடித்த பின்னர் 11.38 மணிக்கு மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறங்கியதாக ‘ஃபிளைட்ரேடார்24’ என்னும் விமானக் கண்காணிப்பு அமைப்பு கூறியது.

விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்த தாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டதாகத் தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்