பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தப்படி உள்ளது.
PM2.5 காற்று மாசுபாட்டு அளவுடன் போராடிவரும் பேங்காக்கில் அம்மாநில பெருநகர நிர்வாகத்தின்கீழ் இயங்கும் 103 பள்ளிகளில் வகுப்புகள் ஒன்று முதல் ஐந்த நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அப்பள்ளிகள் இருக்கும் பகுதிகளைப் பொறுத்து வகுப்புகள் ரத்து செய்யப்படும் காலவரையறை தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
சில பள்ளிகள் ஜனவரி 20ஆம் தேதி முதல் வகுப்புகளை ரத்து செய்யத் தொடங்கின. மற்ற பள்ளிகள் ஜனவரி 23ஆம் தேதி முதல் மூடப்படவுள்ளன.
தங்கள் பகுதிகளில் உள்ள காற்றின் தரம் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதா என்பதை தீர்மானிக்க சம்பந்தப்பட்ட பள்ளி இயக்குநர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதாக பேங்காக் பெருநகர நிர்வாகத்தின் ஆளுநர் சாட்சார்ட் சித்திபண்ட் கூறினார்.
தங்கள் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகப் பள்ளியின் இயக்குநர்கள் கண்டறிந்தால், தங்கள் பள்ளியை மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து மூட அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்கள் வட்டாரங்களில் இருக்கும் பேங்காக் பெருநகர நிர்வாகப் பள்ளிகளை ஒரே நேரத்தில் ஏழு நாள்கள் வரை தொடர்ந்து மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க அந்தந்த வட்டாரத் தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் திரு சாட்சார்ட் சொன்னார்.