காற்றின் மாசுபாட்டுக் குறியீடு உயர்வு: விழிப்புநிலையில் சாபா பேரிடர் செயல்பாட்டு நிலையம்

காற்றின் மாசுபாட்டுக் குறியீடு உயர்வு: விழிப்புநிலையில் சாபா பேரிடர் செயல்பாட்டு நிலையம்

2 mins read
e0f42c0a-b8b2-4e18-9aa7-88b6b5bb989c
செப்டம்பர் 2ஆம் தேதி, கோத்தா கினபாலுவில் உள்ள மெனாரா கினபாலு கட்டடத்திற்கு அருகே தஞ்சோங் லிபாட்டில் காணப்படும் புகைமூட்டம். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோத்தா கினபாலு: சாபா மாநிலத்தின் காற்று மாசுபாட்டுக் குறியீட்டின் அளவு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) அதிகரித்தது.

அதனையடுத்து, அம்மாநிலப் பேரிடர் செயல்பாட்டு நிலையமும் கோத்தா கினபாலு, கெனிங்காவ், பாப்பார் ஆகிய மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை நிலையமும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோத்தா கினபாலுவில் 177, தாவாவில் 153, கெனிங்காவில் 165, கிமானிஸ், பாப்பார் ஆகிய பகுதிகளில் 166, கோத்தா கினபாலு பலதுறைத் தொழிற்கல்லூரியில் 156 எனச் சாபாவின் பல்வேறு இடங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி காற்று மாசுபாட்டுக் குறியீட்டின் அளவு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாக சாபா அம்மாநிலச் செயலாளரும் பேரிடர் நிர்வாகக் குழுத் தலைவருமான சைனுதின் அமான் தெரிவித்தார்.

சாபாவை நோக்கி வீசும் காற்றின் சுழற்சியால் காற்று மாசுபாட்டுக் குறியீடு அதிகரித்துள்ளதாகவும் கலிமந்தானில் தற்போது மழை பெய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளதால், காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

இதுகுறித்து, சாபா முதல்வர் செரி ஹாஜிஜி நூரிடம் புதன்கிழமை (செப்டம்பர் 2) தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

காற்று மாசுபாட்டுக் குறியீட்டின் அளவு 200 அல்லது அதற்குமேல் சென்றால், அரசாங்க நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் எனத் திரு சைனுதின் யோசனை தெரிவித்தார்.

இருப்பினும், உள்ளரங்கு நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்றார் அவர்.

மேலும், காற்று மாசுபாட்டுக் குறியீட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட அல்லது வீட்டிலிருந்து கற்கும்முறை பரிந்துரைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்