கோலாலம்பூர்: மலேசியாவின் ஏர்ஏஷியா நிறுவனம், துருக்கியின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான பெகாசஸ் ஏர்லைன்சுடன் வணிக உடன்பாடொன்றில் இணைந்துள்ளதாகப் புதன்கிழமை (செப்டம்பர் 2) தெரிவித்துள்ளது. இதன் மூலம் இஸ்தான்புல் வழியாகத் தென்கிழக்காசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் இணைப்பு வழித்தடங்கள் திறக்கப்படுகின்றன.
புதிய உடன்பாடு புதன்கிழமையிலிருந்து நடப்புக்கு வருகிறது. அதன் முதற்கட்டத்தில் ஐரோப்பாவின் ஐந்து நகரங்கள் இடம்பெறுகின்றன. லண்டன், மாஸ்கோ, ஏதென்ஸ், அங்காரா, ஸூரிக் ஆகியவையே அந்த நகரங்கள்.
மேலும், இரு நிறுவனங்களின் கூட்டுக் கட்டமைப்பின் மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே 100க்கும் மேற்பட்ட வழித்தடங்களுக்கான இணைப்பை இது படிப்படியாக வழங்கும் என்று ஏர்ஏஷியா அதன் அறிக்கையில் தெரிவித்தது.
புதிய உடன்பாடு, இஸ்தான்புல் வழியாக ஏர்ஏஷியாவின் ஆசியான் கட்டமைப்பையும் பெகாசசின் ஐரோப்பியக் கட்டமைப்பையும் இணைக்கின்றன. ஆசியாவிற்கு வெளியே முதன்முறையாக பஹ்ரேனில் நடுவத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது ஏர்ஏஷியா. அந்த அணுகுமுறையிலிருந்து புதிய உடன்பாடு மாறுபட்டது என்று ஏர்ஏஷியாவின் தலைமை வர்த்தக அதிகாரி அமண்டா வூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“பெகாசசுடனான பங்காளித்துவம் முற்றிலும் மாறுபட்ட சந்தை, மாறுபட்ட அணுகுமுறை; இந்த வணிகம், ஐரோப்பிய வட்டாரத்தை இலக்காகக் கொண்டது,” என்றார் அவர்.
தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியா, புதிய பங்காளித்துவத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கோலாலம்பூர்-இஸ்தான்புல் இடையிலான விமானச் சேவையை அன்றாடச் சேவையாக அதிகரிக்கப்போவதாகத் தெரிவித்தது.
அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பஹ்ரேன் சேவைகளைத் தொடங்குவதற்கான ஏர்ஏஷியாவின் நோக்கம் திட்டமிட்டபடி தொடர்வதாக வூ கூறினார்.
கோலாலம்பூரைப் பஹ்ரேனுடன் இணைத்து, அங்கிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்லும் வகையில், ஜூன் மாதத்தில் பஹ்ரேன் நடுவத்தைத் தொடங்க அந்நிறுவனம் முதலில் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.


