வானூர்தி வழி மருந்து விநியோகம்

சாபா மாநிலத்தில் பயனடையும் 12 கிராமங்கள்

வானூர்தி வழி மருந்து விநியோகம்

2 mins read
dd373b3d-76dc-4876-ad02-cbfb156b4edd
மலேசியாவின் கிழக்கு மாநிலமான சாபாவிலுள்ள கோத்தா கினபாலு நகர். - படம்: ஏர்ஏ‌ஷியா

கோலாலம்பூர்: மலேசியாவின் சாபா மாநிலத்திலுள்ள தாவாவ் பகுதியில் ஆளில்லா வானூர்திகள் வழி மருந்துகளை விநியோகம் செய்யும் முன்னோடித் திட்டம் ஒன்றை வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குள் தொடங்கவுள்ளது.

மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும் சுகாதார அமைச்சும் இணைந்து  இந்த விநியோகத்தைச் செய்ய. 

வழக்கமான மருந்துப் பொருள்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாபா மாநில அரசுடனும் பல அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

“இந்தத் திட்டம், மருத்துவமனைகளில் இருந்து வெகு தொலைவில் வசிக்கும் நோயாளிகள், மருந்துகளைப் பெறுவதற்காகப் பயணம் செய்யும் சுமையைக் குறைக்கிறது. அத்துடன், நேரத்தையும் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும்,” என்று திட்டத்தை வழிநடத்தும்  டாக்டர் முகமது அரிஃப் அடெனன், பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சாபாவின் உட்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைகளைச் சென்றடைவதற்கு பெரும்பாலும் 20 முதல் 30 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது.

இதனால் அவர்களின் சுகாதாரச் சேவைகளைப் பெறுவதில் போக்குவரத்துச் செலவு மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் மலேசியாவின் சாபா பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளதாக டாக்டர் அரிஃப் குறிப்பிட்டார்.

இந்த முன்னோடித் திட்டம் அதன் நோக்கங்களை வெற்றிகரமாக எட்டும் நேரத்தில், இதுபோன்ற தேவைகளைக் கொண்டுள்ள பிற பகுதிகளுக்கும் இந்த முயற்சியை விரிவாக்கம் செய்வது குறித்து ஆணையம் பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தபால் மூலமான மருந்து விநியோகம் ஏற்கெனவே போஸ் மலேசியா மூலம் கிடைப்பதாகவும், உள்ளூர்ச் சமூகங்களுக்குள் மருந்துகளைச் சேகரிக்கும் ஒருங்கிணைந்த மையமாக ‘நாடி’ (NADI) என்ற அமைப்பு விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

“வழக்கமான கண்காணிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு ‘நாடி’ மையங்களில் அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைச் சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். இது ரத்த அழுத்தக் கண்காணிப்பு போன்ற வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்வதைக் குறைக்கிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்