மணிலா: ஹாங்காங்கிலிருந்து பாப்புவா நியூ கினிக்கு 146 பயணிகள், விமானச் சிப்பந்திகளுடன் சென்ற ஏர் நியூகினி விமானம், இயந்திரத்தில் தீ ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் சனிக்கிழமை (நவம்பர் 21) பிலிப்பீன்சில் அவசரமாகத் தரையிறங்கியதாகப் பிலிப்பீன்ஸ் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டது.
வழித்தடத்திலிருந்து மாறி டாவாவோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய போயிங் 767-383இஆர் விமானத்திலிருந்து பயணிகள் 137 பேரும் சிப்பந்திகள் ஒன்பது பேரும் அவசரகாலச் சறுக்கு வழியாக வெளியேறினர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனப் பிலிப்பீன்ஸ் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
வலப்புற இயந்திரத்தில் தீப்பொறிகளோ தீயோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கருவி வழியாகக் கண்டறிந்ததாக விமானிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நள்ளிரவுக்குப்பின் டாவாவோவில் திட்டமிடப்படாத தரையிறக்கத்திற்கு அனுமதி கோரியதாகவும் விமானிகளின் வாக்குமூலங்கள் விசாரணையில் சேர்க்கப்படும் என்றும் ஆணையப் பேச்சாளர் எரிக் அப்போலோனியோ சுருக்கமாகத் தெரிவித்தார்.
பயணிகளும் சிப்பந்திகளும் விமான நிலைய முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; அவர்களுக்குத் தேவையான உதவிகளும் ஹோட்டல் தங்குமிட வசதிகளும் வழங்கப்பட்டன.
சம்பவத்தில் விமானம் சேதம் அடைந்ததாக உடனடித் தகவல்கள் இல்லை. அவசரகாலப் பணிகளுக்காக மற்ற விமானங்களுக்கு டாவாவோ விமான நிலையம் மூடப்பட்டதால் இரு உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. முதன்மை ஓடுபாதையில் பாதுகாப்புச் சோதனைகள் முடிந்தபின் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது என ஆணையம் தெரிவித்தது.
