வாஷிங்டன்: அமெரிக்காவிற்குச் செல்லும் விமானப் பயணிகள் கடந்த 21 நாள்களில் காங்கோ நாட்டில் இருக்கவில்லை என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையத்திடம் அமெரிக்க, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
இபோலா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் வரும் நவம்பர் 3ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் புதிய திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என அமெரிக்க விமான நிறுவனங்கள் சங்கமும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கமும் தெரிவித்துள்ளன. தெரிவித்துள்ளன.
அத்தகைய ஆவணப் படிவங்களை இரு வாரங்களுக்குள் சேகரிக்கும் வகையில் நடைமுறைகளை மாற்றுவது கடினம் என்றும் சோதனைக் கட்டமைப்பு, மின்னிலக்கக் கையொப்பம், ஊழியர் பயிற்சி ஆகியவற்றை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிப்பது இயலாது என்றும் அவை சுட்டிக்காட்டின.
கடந்த 2025ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்ற 130 மில்லியன் விமானப் பயணிகளில் 25,000க்கும் குறைவானவர்களே காங்கோவுடன் தொடர்பிலிருந்தனர் என்று குறிப்பிட்ட விமானக் குழுக்கள், விமானப் பயணிகளுக்கு மட்டும் இக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதை எதிர்த்தன.
அத்துடன், விமானப் பணியாளர்களுக்கும் ராணுவத்தினர்க்கும் இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் இபோலா தொற்று வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய ஆப்பிரிக்காவில் பரவிவரும் இபோலா தொற்றுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. ஆப்பிரிக்காவில் அந்நோயால் கிட்டத்தட்ட 4,700 பேர் இறந்துவிட்டனர்
