பேராக்கில் மது விற்பனை தொடரும்: மாநில அமைச்சர்

1 mins read
829ec211-4730-4977-a6fd-31f9ddd88164
பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போ. - படம்: ‌ஷட்டர்‌ஷாக் / bookaway.com

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் மதுபான விற்பனை தொடரும் என்று அம்மாநிலத்தின் வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நடப்பில் இருக்கும் மது விற்பனை விதிமுறைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்று அவர் அறிவித்துள்ளார். அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும் விதிமுறைகளின்படி மது அருந்தக்கூடியவர்களுக்குத் தடை விதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போதைக்கு நடப்பில் உள்ள விதிமுறைகள் மாற்றப்படமாட்டா. அதனால் இந்த விவகாரம் இத்துடன் நிறைவு பெறுகிறது,” என்று திரு ஙா கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது.

“நீங்கள் மது அருந்த விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்றால் நீங்கள் வாங்காமல் இருங்கள். யாரும் உங்களைத் தடுக்கப்போவதில்லை. ஆனால், பிறர் வாங்குவதைத் தடுக்க முடியாது,” என்றும் அவர் சுட்டினார்.

மது விற்பனைக் கட்டுப்பாடுகளைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் வசிக்கும் கூடுதல் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதன் தொடர்பில் ஈப்போ நகர மன்றம் ஆலோசிப்பதாக அந்நகர மேயர் ருமாய்ஸி பஹாரின் முன்னதாகக் கூறியிருந்தார். மது விற்பனைக் கட்டுப்பாடுகள் தற்போது மாஞ்சோய் பகுதியில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்