தைபே: என்விடியா நிறுவனத் தலைவர் ஜென்சன் ஹுவாங்குடன் தொடர்பில் இருந்த அலிஸ் ஹுவாங் மீது உளவு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் அவர் ஹாங்காங் கடப்பிதழைப் பயன்படுத்தித் தைவானுக்குள் நுழைந்துள்ளார். இதனைத் தைவான் குடிநுழைவு முகவை நவம்பர் 11ஆம் தேதி உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி அலிஸ் ஹுவாங்குடன் தமக்குத் தொடர்பு இருப்பதை ஜென்சன் ஒப்புக்கொண்டுள்ளார். ஆலிஸ் சீன உளவுத்துறைக்காகப் பணியாற்றியதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளைச் சீனா மறுத்துள்ளது.
இந்நிலையில், அலிஸ் ஹாங்காங் கடப்பிதழைப் பயன்படுத்தியதை தைவான் குடிநுழைவு முகவை இயக்குநர் லின் ஹார்ங்-என் உறுதி செய்தார். சீனக் கடப்பிதழைவிட ஹாங்காங் கடப்பிதழைப் பயன்படுத்தித் தைவானுக்குள் நுழைவது எளிது.
ஹுவாங் லீ எனப்படும் அலிஸ் தைவானுக்குள் நுழைந்தாலும் அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தைவான் உள்துறை அமைச்சர் லியு ஷி-ஃபாங் தெரிவித்தார். அவர் ஒற்றர் எனத் தெரிந்திருந்தால் நாட்டுக்குள் அனுமதித்திருக்க மாட்டோம் என்றார் அவர். நுழைவு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது அலிஸின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீண்டும் தைவானுக்குள் நுழைவது சாத்தியமில்லை. இதனை தைவானியப் பாதுகாப்புப் பிரிவுகள் விசாரித்து வருகின்றன.
2025ஆம் ஆண்டு மே மாதம் தைபேயில் நடந்த தொழில்நுட்பக் கண்காட்சியின்போது ஓர் உணவகத்தில் ஜென்சன் அளித்த விருந்தில் அலிஸ் காணப்பட்டார்.
