'நோன்புப் பெருநாளில் ஜோகூர் சோதனைச்சாவடி முகப்புகள் அனைத்தும் இயங்க வேண்டும்'

2 mins read
9c6a6c11-d888-42a7-8cdb-e76d42bb835f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நோன்புப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அதிகமானோர் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுவதால், ஜோகூர் சோதனைச்சாவடியில் அனைத்து முகப்புகளும் தடையின்றிச் செயல்பட வேண்டும் என்று ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி கூறியிருக்கிறார்.

ஜோகூர் சோதனைச்சாவடியின் செயல்திறன் தமது எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுப்பதாக இல்லை என்ற அவர், தற்போது சோதனைச்சாவடி முழு அளவில் இயங்கவில்லை என்றார்.

ஜோகூர் சோதனைச்சாவடிக்கு நேற்று முன்தினம் சென்று அங்கு நிலவரத்தைப் பார்வையிட்ட திரு ஓன் ஹஃபிஸ், "எனது கவனிப்பின்படி, செயல்திறன் 80 விழுக்காடாக உள்ளது எனக் கூறுவேன்," என்று சொன்னார்.

நோன்புப் பெருநாள் விடுமுறையின்போது உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாக பயணம் செய்வோர் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

"சோதனைச்சாவடியில் நிலவரத்தை நான் பார்வையிட்டதில், ஆட்பற்றாக்குறை காரணமாக சில முகப்புகள் இயங்கவில்லை. சாலைப் போக்குவரத்துத் துறை தொடர்பான கணினிக் கட்டமைப்பு பிரச்சினைகள் காரணமாக வேறு சில முகப்புகள் செயல்படவில்லை. சாலைப் போக்குவரத்துத் துறை விவகாரம் ஓரிரு நாளில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று திரு ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

"கார்கள், மோட்டார்சைக்கிள்கள், பேருந்துப் பயணிகள், நடையர்கள் ஆகியோருக்கான முகப்புகள் அனைத்தும் செயல்பாட்டு நிலையில் இருக்கும்படி நான் கேட்டுக்கொண்டுள்ளேன். தொழில்நுட்ப, மனிதவளப் பிரச்சினைகள் அனைத்தும் விரைந்து தீர்க்கப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ சோதனைச்சாவடிக்குச் சென்று அங்கு நிலவரத்தை ஆராய்வது முக்கியம் என்று திரு ஓன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.

"குடிநுழைவுத்துறை ஊழியர்களின் நலனும் கவனிக்கப்பட வேண்டும். பயணிகளின் வருகையைச் சமாளிக்க அவர்கள் கடினமாக உழைக்கின்றனர். அவர்களது மிகைநேர கோரிக்கையைச் செயல்முறைப்படுத்த நீண்டநேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்," என்று திரு ஓன் ஹஃபிஸ் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்