ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இடம்பெறும் மேம்பாட்டுத் திட்டங்கள், பொது வசதிகள் ஆகியவற்றைப் பற்றிய குற்றச்சாட்டுகளையும் இழிவுபடுத்தும் கருத்துகளையும் கொண்ட போலி சமூக ஊடகக் கணக்குகள் செயல்பட்டுவருவதாக நம்பப்படுகிறது.
அத்தகைய கணக்குகளுக்கு எதிராக ஜோகூர் மாநில அரசாங்கம் காவல்துறையிடமும் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடமும் புகாரளித்துள்ளது. சம்பந்தப்பட்ட கணக்குகள், அவற்றில் உள்ள பதிவுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை அறியவும் அவற்றின் தொடர்பில் பலர் ஒன்றுபட்டுச் செயல்பட்டனரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் விசாரணை நடத்த வகைசெய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.
அக்கணக்குகளில் இடம்பெற்ற பல பதிவுகளில் பயன்படுத்தப்பட்ட சொற்களும் கருத்துகளும் ஒரே மாதிரியாக இருந்ததாக திரு ன் ஹஃபிஸ் குறிப்பிட்டார். அப்பதிவுகளில் மில்லியன்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களைப் பற்றிப் பேசப்படுவதாகவும் அதேவேளை குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் விநோதமாக இருப்பதுடன் சந்தேகம் தரும் வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டினார்.
சம்பந்தப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை நடத்துவோர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் திரு ஒன் ஹஃபிஸ் சொன்னார்.
சம்பந்தப்பட்ட கணக்குகள் பெரும்பாலானவற்றுக்குப் பின்தொடர்பவர்கள் (followers) கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்களின் கருத்துகள், விமர்சனம், புகார்கள் ஆகியவற்றைத் தமது அரசாங்கம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
