மலாக்காவில் உள்ள 21 தமிழ்ப் பள்ளிகளுக்கு மித்ராவின் 700,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு

மலாக்காவில் உள்ள 21 தமிழ்ப் பள்ளிகளுக்கு மித்ராவின் 700,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு

படம்: பெர்னாமா

05 Nov 2026 - 6:59 pm

2 mins read

மலாக்கா: மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா), மலாக்காவில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு கற்பித்தல், கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு 755,390 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் ‘மடானி’ திட்டத்தின் ஒரு பகுதியாக தளவாடங்கள் வழங்குதல், துணைப் பாட வகுப்புகள் நடத்துதல், அறிவார்ந்த பலகைகள் போன்ற மின்னிலக்கக் கற்றல் கருவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.

“மாணவர்கள் இந்த உதவியின் மூலம் முழுமையாகப் பயனடைவதை உறுதிசெய்ய, மித்ரா, கல்வி அமைச்சு, பள்ளி நிர்வாகங்கள், பள்ளி வாரியங்களின் கூட்டு முயற்சியுடன் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,” என்று அவர் வியாழக்கிழமை (நவம்பர் 5) ஆயர் மெர்பாவ் பகுதியில் உள்ள ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளியைப் பார்வையிட்டபோது கூறினார்.

இந்த முன்னெடுப்புகளின் கீழ், ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளி 47,560 ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றுள்ளதாக திரு ரமணன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, பாலர்பள்ளி முதல் பொது, தனியார் உயர்கல்வி நிலையங்கள் வரை, அனைத்து நிலைகளிலும் உள்ள இந்திய மாணவர்களுக்காக மித்ரா பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“ஒவ்வொரு கற்றல் நிலையிலும், இலக்கு வைக்கப்பட்ட குழுக்கள் தங்களின் தேவைக்கேற்ப உதவிகளைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், எங்களது அணுகுமுறை ஒட்டுமொத்த கல்விச் சூழலமைப்பையும் உள்ளடக்கியுள்ளது.

“இந்த முன்னெடுப்புகள் பள்ளிகளில் தொழில்நுட்பம். மின்னிலக்கமயமாக்கலுக்கான அணுகலை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன,” என்று அவர் மேலும் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
நிதிகல்வி அமைச்சுஆர்.ரமணன்