தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்: சாதனைப் பாதையில் அமெரிக்கா

2 mins read
8fcd9624-7fce-4f9e-bc6e-1185790512eb
அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உரையைக் கேட்டு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பினர். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்கா மீண்டும் வெற்றியின் பாதையில் செல்வதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்ற பிறகு, நாடாளுமன்றத்தில் அவர் புதன்கிழமை (மார்ச் 5) முதன்முறையாக உரையாற்றினார்.

அவரது உரை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதிபர் டிரம்ப்பின் மிக நெருங்கிய ஆலோசகரான இலோன் மஸ்க், நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து உரையைக் கேட்டார்.

அமெரிக்காவை வடிவமைக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அதிபர் டிரம்ப், அதற்கான பணிகள் தற்போது ஆரம்பநிலையில் இருப்பதாகக் கூறினார்.

“அமெரிக்காவின் கனவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,” என்று அதிபர் டிரம்ப் கூறியதைக் கேட்டு நாடாளுமன்றத்தில் கூடியிருந்த குடியரசுக் கட்சியினர் ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பினர்.

ஆனால் அதிபர் டிரம்ப் தமது உரையைத் தொடங்கி சில நிமிடங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அதிருப்திக் குரல்கள் எழுந்தன.

மரபு மீறியதற்காக அவர்களில் ஒருவரான திரு அல் கிரீன் வெளியேற்றப்பட்டார்.

அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது எழுந்து நின்று, எதிர்ப்புக் குரல் எழுப்பி, அதிபரை நோக்கித் தமது கைத்தடியை அசைத்ததற்காக திரு கிரீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமது சாதனைகளை அதிபர் டிரம்ப் பட்டியலிட்டபோது மற்ற ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து சில அட்டைகளை உயர்த்திப் பிடித்துக் காட்டினர்.

அந்த அட்டைகளில் ‘பொய்’, ‘மஸ்க் திருடுகிறார்’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

“அமெரிக்கா மீண்டும் வலுவுடன் வெற்றியின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்கா மீண்டு வருகிறது. இதுபோல் ஒன்றை உலகம் இதுவரை கண்டதில்லை. இதுபோன்ற ஒரு சாதனையை இவ்வுலகம் இனிமேல் பார்க்க முடியாமல்கூட போகலாம்.

“பெரும்பாலான அரசாங்கங்கள் நான்கு அல்லது எட்டு ஆண்டுகளில் செய்து முடிக்கும் பணிகளைவிட அதிகமான பணிகளை எனது அரசாங்கம் வெறும் 43 நாள்களில் செய்து முடித்துவிட்டது. 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன், 400க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்,” என்று டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர தாம் விரும்புவதாகவும் உரையில் டிரம்ப் தெரிவித்தார்.

அந்தத் தீவு தற்போது டென்மார்க்கின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இருப்பினும், அது தன்னாட்சி உரிமையைக் கொண்டுள்ளது.

“உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம். உங்களைச் செல்வந்தர்களாக்குவோம். நீங்கள் இதுவரை நினைத்துப் பார்க்காத உயரத்துக்கு உங்களைக் கொண்டு செல்வோம்.

“கிரீன்லாந்தின் மக்கள்தொகை மிகவும் சிறியது. ஆனால் அந்தத் தீவின் பரப்பளவு மிகவும் பெரியது. ராணுவப் பாதுகாப்புக்கு அது மிகவும் முக்கியமான தீவு,” என்று கிரீன்லாந்து மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

கிரீன்லாந்து டென்மார்க்கிடமிருந்து பிரிந்து சென்று தனிநாடாகத் திகழ வேண்டும் என்று அத்தீவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால், கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாவதை அவர்களில் பலர் எதிர்ப்பதை அதே கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்