உலகக் கிண்ணக் காற்பந்து 2026

நுழைவுச்சீட்டு வாங்கியோருக்கு விரைவு விசா வழங்க அமெரிக்கா முடிவு

2 mins read
b5a12401-629e-4865-b849-81903867cf8b
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: நியூயார்க் டைம்ஸ்

வா‌‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நேரடியாகக் காண நுழைவுச்சீட்டு வாங்கியோருக்கு அதிவிரைவில் சிறப்பு விரைவு விசா வழங்கும் திட்டத்தை திங்கட்கிழமை (நவம்பர் 17) அன்று அறிவித்துள்ளார். ‘ஃபிஃபா பாஸ்’ என்று அது அழைக்கப்படுகிறது. இருப்பினும் அது அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான உத்தரவாதம் அல்ல என்று திரு டிரம்ப்பின் நிர்வாகம் எச்சரித்தது.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. போட்டிகள் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்று அமெரிக்கா உறுதிகூறியுள்ளது. திரு டிரம்ப்பின் குடிநுழைவுக் கொள்கைகளால் ரசிகர்களுக்குச் சிக்கல் ஏற்படக்கூடும் என்ற அக்கறை நிலவும் வேளையில் வா‌ஷிங்டனின் கருத்து வந்துள்ளது.

“உலகக் கிண்ண ஆட்டங்களைப் பார்க்க விரும்புவோர் இப்போதே விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று திரு டிரம்ப் கூறினார். நுழைவுச்சீட்டு வாங்கியோருக்கு விரைவாக விசா வழங்கும் திட்டத்தை வெள்ளை மாளிகையில் வெளியிட்டபோது அவருடன் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்ட்டினோவும் இருந்தார்.

ஒருவரிடம் உலகக் கிண்ணத்திற்கான நுழைவுச்சீட்டு இருந்தால், விசா வழங்கப்படுவதற்கு முன்பு இடம்பெறக்கூடிய நேர்காணலுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார் திரு இன்ஃபன்ட்டினோ.

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்க ஐந்து முதல் 10 மில்லியன் பேர்வரை அமெரிக்காவுக்குச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவரின் நுழைவுச்சீட்டு, அவருக்கான விசா அல்ல என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெளிவுபடுத்தினார்.

தற்போதைய திட்டத்தின்படி, நுழைவுச்சீட்டு வாங்கியோருக்கு ஆறு முதல் எட்டு வாரத்திற்குள் நேர்காணலுக்கான அழைப்பு கிடைத்துவிடும் என்றார் அவர். விசாவுக்கு விண்ணப்பிக்க இறுதிவரை காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் யாருடன் யார் பொருதுவர் என்பது குறித்த விவரங்கள் வா‌ஷிங்டனில் அடுத்த மாதம் (டிசம்பர் 2025) ஐந்தாம் தேதி வெளியிடப்படும்.

அதே நாள், புதிய அமைதிப் பரிசை சம்மேளனம் அறிவிக்கவிருக்கிறது. அது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத்தான் செல்லும் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்