அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் அடுத்த சுற்றுக்குத் தகுதி

அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் அடுத்த சுற்றுக்குத் தகுதி

2 mins read
அடுத்த சுற்று: அமெரிக்கா-பெல்ஜியம், இங்கிலாந்து-மெக்சிகோ
66dcf28d-5e20-4f76-9cc8-9e994367ca63
அமெரிக்கா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதைக் கொண்டாடும் அந்நாட்டு சுதந்திர தேவதையைப் போன்ற வேடமணிந்த காற்பந்து ரசிகர். - படம்: ஏஎஃப்பி

சான்பிரான்சிஸ்கோ: வியாழக்கிழமை (ஜூலை 2) நடந்த உலகக் கிண்ணப் போட்டியின் 32 குழுக்களுக்கான ‘நாக்அவுட்’ சுற்றில் அமெரிக்கா, போஸ்னியா ஹெர்சகோவினா குழுவை 2-0 என்ற எண்ணிக்கையில் வென்று கால் இறுதிக்கு முந்தைய 16 குழுக்களுக்கு இடையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்திலும் 84வது நிமிடத்திலும் இரு கோல்களை அமெரிக்கா புகுத்தியது. அதே சமயம் 64 நிமிடத்தில் அமெரிக்க விளையாட்டாளரான ஃபொலாரின் பலோகன்னுக்கு தவறான ஆட்டத்துக்காகச் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு அவர் திடலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனவே அதிலிருந்து ஆட்டத்தின் இறுதிவரை 10 விளையாட்டாளர்களுடன் ஆடிய அமெரிக்காவின் தற்காப்பு அணியை, போஸ்னியாவால் தகர்த்து கோல் போட முடியவில்லை. அதே பத்து வீரர்களுடன் இரண்டாம் கோலையும் புகுத்தி அமெரிக்கா அதன் ஆதரவாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

பெல்ஜியம் 3 - 2 செனகல்

கூடுதல் நேரத்தில்  பெனால்டி வாய்ப்பு வழியாக வெற்றி கோலை புகுத்திய பெல்ஜியத்தின் யூரி டியலிமன் கொண்டாட்டத்தில் திளைத்தார்.
கூடுதல் நேரத்தில் பெனால்டி வாய்ப்பு வழியாக வெற்றி கோலை புகுத்திய பெல்ஜியத்தின் யூரி டியலிமன் கொண்டாட்டத்தில் திளைத்தார். - படம்: இபிஏ

சியட்டல் நகரில் நடந்த பெல்ஜியத்துக்கும் செனகல் குழுவுக்குமான மற்றோர் ஆட்டத்தில் செனகல் ஆட்டத்தின் 24வது நிமிடத்திலும் 51வது நிமிடத்திலும் இரு கோல்களைப் புகுத்தி முன்னணியில் இருந்தது.

இருப்பினும் விடாமுயற்சியுடன் போராடிய பெல்ஜியம், 86ஆம் நிமிடத்திலும் 89ஆம் நிமிடத்திலும் மூன்று நிமிட இடைவெளியில் இரு கோல்களைப் புகுத்தி ஆட்டத்தை சமநிலைப் படுத்தியது. அரைமணிநேரம் கூடுதல் நேரத்திற்குச் சென்ற ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்பைப் பயன்படுத்தி பெல்ஜியம் ஒரு கோலைப் போட்டு 3-2 என்ற எண்ணிக்கையில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து 2 - 1 காங்கோ

காங்கோவுக்கு எதிராக இங்கிலாந்தின் இரு கோல்களைப் போட்ட ஹெரி கேன்.
காங்கோவுக்கு எதிராக இங்கிலாந்தின் இரு கோல்களைப் போட்ட ஹெரி கேன். - படம்: இபிஏ

அட்லாண்டா நகரில் நடந்த இங்கிலாந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசு குழுக்களுக்கு இடையிலான போட்டியில் 3-2 என்ற எண்ணிக்கையில் இங்கிலாந்து வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அந்த வெற்றியை இங்கிலாந்து எளிதில் அடையவில்லை. ஆட்டம் தொடங்கி ஏழாம் நிமிடத்தில் காங்கோ குழுவின் பிரையன் சிபெங்கா முதல் கோலைப் புகுத்தி இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தார்.

அதிலிருந்து இங்கிலாந்து நெடுநேரம் கோல் புகுத்த முயன்றது. பிறகு இங்கிலாந்தின் அணித் தலைவர் ஹேரி கேன் 75வது நிமிடத்தில் கோல் புகுத்தி ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார். பிறகு அவரே 86ஆம் நிமிடத்திலும் இரண்டாம் கோலைப் புகுத்தி அவரது அணியை அடுத்த சுற்றுக்கு அனுப்பிவைத்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

32 குழுக்களுக்கான சுற்று

ஜூலை 3ஆம் தேதி மேலும் சில ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஸ்பெயின்-ஆஸ்திரியா, போர்ச்சுகல்-குரேஷியா, சுவிட்சர்லாந்து-அல்ஜீரியா, கொலம்பியா-கானா ஆகிய ஆட்டங்களும் ஆஸ்திரேலியா-எகிப்து, அர்ஜென்டினா-காபோ வெர்டெ ஆகிய போட்டிகளும் இடம்பெறுகின்றன.

16 குழுக்களுக்கான சுற்றின் ஆட்டங்கள்

இதுவரை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்ற குழுக்களுக்கு இடையிலான ஆட்டங்களின்படி, அமெரிக்கா பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது. இங்கிலாந்து மெக்சிகோவுடன் ஆடவுள்ளது. பாராகுவே அணி பிரான்சுடனும் பிரேசில் நார்வே குழுவுடனும் மோதவுள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்வெற்றிஅமெரிக்காஇங்கிலாந்துபெல்ஜியம்