மிகப் பெரிய தாக்குதலை அமெரிக்கா இன்னும் ‘தொடங்கவே இல்லை’: டிரம்ப்

மிகப் பெரிய தாக்குதலை அமெரிக்கா இன்னும் ‘தொடங்கவே இல்லை’: டிரம்ப்

ஈரானைத் தாக்க அமெரிக்காவிற்கு இதுவே கடைசி, நல்ல வாய்ப்பு என்கிறார்
1 of 2
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

03 Mar 2026 - 11:08 am

2 mins read

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது மிகப் பெரிய தாக்குதலை இன்னும் தொடங்கவே இல்லை என்று அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (மார்ச் 2) தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இயங்கும் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதற்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டதைவிட ஈரான் மீதான தாக்குதல் பல நாள்கள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்

தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28ம் தேதியே முக்கிய இலக்கான ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டது, எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகச் செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது திரு டிரம்ப் பேசினார். அப்போது, அமெரிக்காவின் நெடுநாள் எதிரியான ஈரானைத் தாக்கியதற்கான நான்கு காரணங்களை அவர் முன்வைத்தார். இதுவே அமெரிக்காவிற்குக் கடைசி, நல்ல வாய்ப்புமாகும் என்றும் அவர் சொன்னார்.

“ஈரானின் ஏவுகணைத் திறன்களை அழிப்பது முதல் குறிக்கோள். இரண்டாவது அவர்களது கடற்படையை ஒழிப்பது. உலகில் பயங்கரவாதத்தை வளர்க்கும் தலைமை நாடான ஈரான் அணுவாயுதங்களை அறவே அடையமுடியாமல் செய்வது மூன்றாவது இலக்கு. அவர்களது எல்லையைக் கடந்து நேரடியாகப் போராளிகளுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவது தாக்குதலுக்கான இறுதிக் காரணம்,” என்று அதிபர் டிரம்ப் விவரித்தார்.

ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டிரம்ப் முதன்முதலில் பொதுவில் வெளியிட்டுள்ள கருத்துகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் இதுவரை ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 787 ஆக பதிவிடப்பட்டுள்ளது என்று அரசாங்க ஊடகம் செம்பிறை இயக்கத்தைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெய்ரூட், டெஹ்ரான் ஆகிய இடங்களை இஸ்ரேல் ஒரே நேரத்தில் தாக்கப்போவதாக அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்ஈரான்தாக்குதல்அணுவாற்றல்