கோலாலம்பூர்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மலேசியாவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோலாலம்பூரில் நடக்கும் இரண்டு நாள் சந்திப்புக் கூட்டத்தில் (அக்டோபர் 31, நவம்பர் 1) திரு ஹெக்செத் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான் கூட்டமைப்பு) தற்காப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
சீனாவின் ஆதிக்கத்தைத் தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் கட்டுப்படுத்தும் நோக்கில் திரு ஹெக்செத் சந்திப்புகளை மேற்கொள்கிறார். இதற்கு முன் இருந்ததைவிட இந்த வட்டாரத்தில் தற்போது வாஷிங்டன் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
திரு ஹெக்செத், இந்தியா, இந்தோனீசியா, பிலீப்பீன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடன் பேசுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் தலைவர்களின் சந்திப்பு நேரங்களில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணத்தின் போது திரு ஹெக்செத் சீனாவின் அதிகாரிகளைச் சந்திப்பாரா என்பது குறித்துத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் ராணுவப் பொருள்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங்குடனான சந்திப்பில் திரு ஹெக்செத் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இரு நாடுகளும் தற்காப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புதிய திட்டத்தை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், மலேசிய தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நூர்டினும் ஹெக்செத்தும் சந்தித்துப் பேசினர். தென்சீனக் கடலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர்கள் தீவிரமாகப் பேசினர்.

