சக்திவாய்ந்த நாடுகளின் முன்னேற்றத்தைத் தடுக்க முயல்கிறது அமெரிக்கா: ஈரானிய அரசதந்திரி

சக்திவாய்ந்த நாடுகளின் முன்னேற்றத்தைத் தடுக்க முயல்கிறது அமெரிக்கா: ஈரானிய அரசதந்திரி

1 mins read
339eb684-3abe-4c19-9296-091542b6023c
ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை (பிப்ரவரி 28) நடத்திய தாக்குதலுக்குப் பிறகு சேதமுற்ற கட்டடத்தைச் சிலர் பார்வையிட்டனர். - காணொளிப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியா, சீனா, ர‌‌ஷ்யா ஆகியவற்றின் உயர்வை அமெரிக்கா போர்களின் மூலம் தடுக்க முயல்வதாக ஈரானிய அரசதந்திரி அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி கூறியிருக்கிறார்.

உலகில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக அவர் சொன்னார். பங்காளித்துவ நாடுகளை முக்கியமாகச் சக்திவாய்ந்தவற்றை அது விரும்பவில்லை என்றார் அவர். ஈரானின் உச்சத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியான திரு இலாஹி, ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் அவ்வாறு தெரிவித்தார்.

“இன்னும் சிறிது காலத்தில் உலகின் ஆகச் சக்திவாய்ந்த நாடுகளாக இந்தியா, சீனா, ர‌‌ஷ்யா, அமெரிக்கா ஆகியவை இருக்கும். ஆனால் இந்தியாவோ சீனாவோ சக்திவாய்ந்த பங்காளித்துவ நாடுகளாக உருவெடுப்பதைப் பார்க்க அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் இந்த மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும் உலக அளவிலான அதன் ஆதிக்கத்தைக் கட்டிக்காக்கவும் இத்தகைய போர்களை அமெரிக்கா தூண்டிவிடுகிறது,” என்று அவர் சொன்னார்.

தற்போதைய பூசலை நிறுத்துவதற்கு அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் பேசத் தயார் என்று திரு இலாஹி கூறினார். ஆணையிடாமல் கண்ணியத்துடன் நடத்தினால் அவ்வாறு செய்யத் தயார் என்றார் அவர்.

ஈரான், உரிமைக்காகப் போராடுவதாய்த் திரு இலாஹி குறிப்பிட்டார். போரைத் தொடங்கியது அமெரிக்காவே என்பதைச் சுட்டிய அவர், அதை நிறுத்துமாறு வா‌ஷிங்டனைக் கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் அமைதிக்குக் கைம்மாறாகத் தடைகள் அகற்றப்படும் என்றும் உத்தரவாதம் தரப்பட வேண்டும் என ஈரான் விரும்புகிறது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காஇஸ்ரேல்போர்இந்தியாசீனார‌ஷ்யா