வாஷிங்டன்: விமானப் போக்குவரத்து தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நான்கு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்த துண்டிப்புச் சம்பவத்துக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்தாகின அல்லது ஒத்திவைக்கப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி கட்டமைப்பு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டாலும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்க அதிகாரிகள் விமானப் போக்குவரத்து தொலைத்தொடர்புக் கட்டமைப்பை மறுசீரமைக்க அமெரிக்க டாலர் 50 பில்லியன் (S$64.36 பில்லியன்) நிதியை வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக அதிகாரிகளும் போக்குவரத்துத் துறையின் செயலாளர் சீன் டஃப்வியும் அச்சம்பவத்துக்கு முன்பாக அமெரிக்க டாலர் 30.1 பில்லியன் (S$38.74 பில்லியன்) தொகையைக் கேட்டிருந்தனர்.
பழைமை அடைந்துவரும் பல விமான நிலையங்களையும் போக்குவரத்துத் தொலைத்தொடர்புக் கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள் நிதிக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
“இது உண்மையில் ஒரு நெருக்கடி நிலையாகும். சீராகச் செயல்படும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பை வைத்திருப்பதைவிட வேறு எது முக்கியமானது?” என்று திரு சீன் டஃப்வி கேள்வி எழுப்பினார்.
நடந்துள்ள தொலைத்தொடர்புத் துண்டிப்புச் சம்பவம், கூட்டரசு விமானத் துறை, விமான நிலையங்களுக்கு இடையே கையாளும் பயண வழித்தட மையங்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
குடியரசுக் கட்சியினர் தலைமையேற்றுள்ள செனட் சபையின் வர்த்தகக் குழு, அந்த மையங்களை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டது.
அதோடு அமெரிக்கக் காங்கிரஸ் அமெரிக்க டாலர் $1.9 பில்லியன் (S$2.4 பில்லியன்) மதிப்புள்ள தொகையை அவ்வாறான மேம்பாட்டுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்ததையும் சுட்டியது.
உலகில் மிகச் சிக்கலான விமான போக்குவரத்து பாதைகளைக் கொண்ட அமெரிக்காவில், 2025 ஜனவரி மாதம், ரோனல்ட் ரீகன் விமான நிலைய வான்வெளியில் ஒரு விமானத்துக்கும் ராணுவ ஹெலிகாப்டருக்கும் இடையே நடந்த மோதல் விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல், பயணங்கள் தாமதம், தொழில்நுட்பக் கோளாறு, கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் ஊழியர் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் அங்கு விமானப் பயணங்கள் தடைப்படுவதோடு மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
இதுபோன்ற பல புகார்கள் எழுந்ததால் ஜூலை 2025ல் விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு மேம்பாட்டுக்கும் அதற்கான ஊழியர்களைப் பணியமர்த்தவும் அமெரிக்க டாலர் $12.5 பில்லியன் (S$16.9 பில்லியன்) நிதிக்கான ஒப்புதலை ஏற்கெனவே அமெரிக்கக் காங்கிரஸ் வழங்கியுள்ளது.
