அமெரிக்க, சீனப் பொருளியல் தலைவர்கள் பாரிசில் சந்திப்பு

அமெரிக்க, சீனப் பொருளியல் தலைவர்கள் பாரிசில் சந்திப்பு

1 mins read
மத்திய கிழக்குப் போரில் அமெரிக்காவின் கவனம் சாய்ந்திருப்பதால், இருநாட்டு வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவே.
aa3b3625-3829-40a1-8a2a-28921a6e5379
கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த ஆசிய பசிஃபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் (ஏபெக்) கலந்துகொண்டபோது சந்தித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஸீ ஜின்பிங். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் பொருளியல் துறையின் மூத்த தலைவர்கள் பாரிசில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளனர்.

இம்மாதக் கடைசியில் நடக்கவுள்ள அதிபர் டோனல்ட் டிரம்ப், அதிபர் ஸீ ஜின்பிங் ஆகியோரின் உச்ச மாநாட்டுக்கு இந்தப் பொருளியல் தலைவர்களின் சந்திப்பு முன்னோடியாக அமையும் என்பது அரசியல் நிபுணர்கள் பலரது கணிப்பு.

மத்திய கிழக்குப் போரில் அமெரிக்காவின் கவனம் சாய்ந்திருப்பதால், இச்சந்திப்புக்குப் பிறகு இருநாட்டு வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் சற்று குறைவே என்பதையும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாறிவரும் அமெரிக்க வரிவிதிப்பு, சீனாவின் அரியவகை மண்வளங்கள், காந்தங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தல், சீனாவுக்கு உயர்ரக தொழில்நுட்ப ஏற்றுமதிகளுக்கான அமெரிக்கக் கட்டுப்பாடு, அமெரிக்க விவசாயப் பொருள்களை சீனா வாங்குவது போன்ற பல அம்சங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரஞ்சுத் தலைநகர் பாரிசில் இயங்கும் பொருளியல் ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பின் தலைமையகத்தில் நடக்கவுள்ள இந்தச் சந்திப்பை அமெரிக்க நிதித் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட், சீனத் துணைப் பிரதமர் ஹெ லிஃபெங் இருவரும் தலைமை ஏற்று நடத்துவர்.

பெரும்பாலும் செல்வ வளம் பெற்ற 38 ஜனநாயக நாடுகள் உறுப்பினராக உள்ள அந்த அமைப்பில் சீனா இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்