பணமோசடியில் ஈடுபட்ட ஆடவருக்கு 70 மாதச் சிறை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

பணமோசடியில் ஈடுபட்ட ஆடவருக்கு 70 மாதச் சிறை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

2 mins read
636ddfa0-a3e5-4710-9cbe-c10e5e2297bb
பணமோசடியில் ஈடுபட்ட இவான் டெஞ்ச்மென்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விலையுயர்ந்த போர்‌ஷே கார். - படம்: அமெரிக்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம்
Google News Preferred Icon

வா‌‌‌ஷிங்டன்: அமெரிக்காவின் வா‌ஷிங்டன் டிசியில் பல மில்லியன் டாலர் மதிப்பிலான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய 22 வயது ஆடவருக்கு 70 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவான் டெஞ்ச்மென் என்ற ஆடவர், சிங்கப்பூரைச் சேர்ந்த மெலனி லாம் என்ற ஆடவரின் தலைமையில் இயங்குவதாக நம்பப்படும் மின்னிலக்க நாணயத் திருட்டுக் கும்பலுக்காகக் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முற்பட்டதாகத் தெரிகிறது.

பல மாநிலக் குற்ற நிறுவனம் மூலம் $263 மில்லியன் டாலர் மதிப்பிலான மின்னிலக்க நாணயங்களைக் களவாடியதாக வா‌ஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் டெஞ்ச்மென்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த லாம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் லாம் ஒரு குற்றவாளி என்று இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை.

லாம் இயக்குவதாகக் கூறப்படும் திருட்டுக் கும்பல், திருடப்பட்ட பணத்தின் மூலம் சொகுசுக் கார்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த பணப்பைகள் என ஒரே இரவில் $500,000 அமெரிக்க டாலர் வரை செலவு செய்ததாகக் கூறப்பட்டது.

மோசடியில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்ட டெஞ்ச்மென், திருட்டுக் கும்பலுக்காகக் குறைந்தது $3.5 மில்லியன் டாலர் வரையிலான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகத் தெரிவித்தார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் மூவாண்டு கண்காணிப்பில் இருக்கும்படியும் டெஞ்ச்மென்னுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பண மோசடியில் டெஞ்ச்மென் முக்கியப் பங்கு வகித்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூறினர்.

திருடப்பட்ட மின்னிலக்க நாணயத்தை ரொக்கமாக மாற்றிக்கொடுத்தது மட்டுமின்றி லாஸ் ஏஞ்சலிஸ், மயாமி ஆகியவற்றில் விலையுயர்ந்த வீடுகளையும் திருட்டுக் கும்பல் உறுப்பினர்களுக்குப் பெற்றுதரவும் டெஞ்ச்மென் உதவினார்.

அத்தகைய வீடுகளின் மதிப்பு $4 மில்லியன் டாலரிலிருந்து $9 மில்லியன் டாலர் வரை என்று அமெரிக்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.

அத்தகைய வீடுகளில் தங்கியிருந்த திருட்டுக் கும்பல் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் 20 வயதுக்குக்கீழ் உள்ளோர் என்றும் வேலை செய்யாத இளையர்கள் என்றும் அலுவலகம் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்