குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையால் டிரம்ப்மீது அமெரிக்கர்கள் அதிருப்தி

1 mins read
befb376c-b587-40b2-beee-2ca566704ab1
குடிநுழைவு, சோதனை ஆணைய அதிகாரிகள் (ஐஸ்) மேற்கொண்ட நடவடிக்கைகள் அத்துமீறி சென்றுவிட்டதாக 61 விழுக்காட்டு அமெரிக்கர்கள் கருத்தாய்வில் தெரிவித்தனர். - படம்: இபிஏ

அமெரிக்காவில் குடியேறிகளை முடக்குவதற்கு அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பல அமெரிக்கர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

குறிப்பாக, மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியபோலிஸ் நகரில் இரண்டு குடியேறிகள் கொல்லப்பட்டதை அடுத்து, மக்கள் டிரம்ப் அரசாங்கத்தின்மீது அதிருப்தியடைந்துள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் புலப்பட்டது.

‘குடியேறிகளுக்கு எதிராகச் சோதனை நடவடிக்கைகள் நடத்தப்படும்,’ என்று திரு டிரம்ப் அளித்த வாக்குறுதி, அதிபர் பதவியில் அவரை அமரவைத்த காரணங்களில் ஒன்று.

ஆனால், அதுவே தற்போது அவருக்குப் பாதகமாகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஆட்சியின் இடைத்தவணைக் காலத் தேர்தலுக்கு முன்னரே 79 வயது திரு டிரம்ப்மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதைக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

குடிநுழைவு, சோதனை ஆணைய அதிகாரிகள் (ஐசிஇ) மேற்கொண்ட நடவடிக்கைகள் அத்துமீறி சென்றுவிட்டதாகக் கூறும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 61 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்தாய்வில் கண்டறியப்பட்டது.

‘யூகவ்’ அமைப்பு நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட 34 விழுக்காட்டினர் ஐசிஇ துறையை முழுமையாக ஒழித்துவிடவேண்டும் என்று குறிப்பிட்டனர்.

கள்ளக் குடியேற்றம் மீதிருந்த மக்களின் கவனம் தற்போது ஐசிஇபிரிவுமீதும் அதன் நடவடிக்கைகள்மீதும் திரும்பிவிட்டதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், திரு டிரம்ப்பின் நட்பு வட்டாரங்களும் ஐசிஇ அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடினர்.

குறிப்புச் சொற்கள்