வாஷிங்டன்: வெனிசுவாலேவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அமெரிக்கா அடுத்ததாக கிரீன்லாந்தைக் குறிவைத்துள்ளது.
வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பனிப் பிரதேசமான அப்பகுதி, ஐரோப்பிய நாடான டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்டதாகும். இருப்பினும், கனிம வளங்கள் மிகுந்த கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது என்ற அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்நாட்டை தன்வசப்படுத்த முயன்றுவருகிறார்.
அவ்வாறு கிரீன்லாந்தை அமெரிக்க ஆட்சிக்குக் கீழ் கொண்டுவருவதை ஆதரிக்காத நாடுகளுக்கு வரிகளை விதிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) தலைநகர் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவும் சீனாவும் அந்த வட்டாரத்தில் சம்பந்தப்படாமல் இருப்பதை டென்மார்க் உறுதிசெய்யத் தவறி வருவதாகவும் அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமாக விளங்கும் கிரீன்லாந்து அமெரிக்கப் பாதுகாப்புக்கு முக்கியமானது என்பது திரு டிரம்பின் வாதம்.
ஐரோப்பிய நாடுகளின் வட அட்லான்டிக் பெருங்கடல் பகுதியின் தற்காப்புக்கு உருவாக்கப்பட்ட நேட்டா கூட்டமைப்பு அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால், அதலிருந்து விலகப்போவதாகவும் திரு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூட்டமைப்பு ஏவுகணைகளை நிர்வகிக்கும் தற்காப்பு அமைப்பு போன்ற ஒன்றுதான் எனவும் அதனை சிறுமைப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
அடிப்படையிலேயே பல கருத்துவேறுபாடுகள் நிறைந்த இந்தத் திட்டம் பற்றி எப்படியாவது ஆதரவு திரட்ட, அமெரிக்க அதிகாரிகள் நேட்டோ அமைப்புடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் டென்மார்க் அரசாங்கத்திடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றனர்.
“எங்களது பாதுகாப்புக்கென கிரீன்லாந்து தேவை. எங்களுக்கு அப்பகுதி கிடைக்கவில்லையெனில் தேசியப் பாதுகாப்பில் பிளவு எற்பட்டுவிடும். குறிப்பாக ஏவுகணை தடுப்பு அரணான ‘கோல்டன் டோம்’ திட்டத்தை பெருமளவில் அது பாதித்துவிடும்,” என்று அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த சுகாதாரக் கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கிரீன்லாந்து விவகாரத்தில் தமது ராணுவ பலத்தைப் பயன்படுத்தி இலக்கை அடைய அதிபர் டிரம்ப் தயங்கமாட்டார் எனவும் அவர் அண்மையில் மிரட்டல் விடுத்திருந்தார்.

