புதுடெல்லி: இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதித்துள்ளது. அமெரிக்கா அழுத்தம் அளித்து வரும் நிவையில், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்கு ஏற்ப இந்தியா - சீனா உறவு மேம்படக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியா தனது உத்திபூர்வப் பங்காளியாகச் செயல்படுகிறது என்று அமெரிக்கா நீண்டகாலமாகத் தெரிவித்து வந்தது.
பாதுகாப்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா- சீனா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய உலகளாவிய சூழலைக் கருத்தில் கொண்டு இருநாடுகளும் அவற்றுக்கு இடையிலான உறவை மேம்படுத்தச் செயல்பட்டுவருவது போல தெரிவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில், வளர்ந்து வரும் பொருளியல்களுக்கான உச்சநிலை மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடையிலான சந்திப்பு இதைத் தொடங்கி வைத்தது.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான அதிகாரபூர்வப் பயணங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் வர்த்தகத் தடைகள், மக்கள் நடமாட்டம் போன்றவை குறித்து இருநாடுகளும் கலந்துரையாடி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரசியல் ரீதியாக நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டால் அது தங்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என்று சீனாவில் உள்ள சிலர் கருதுவதாகக் கூறப்படுகிறது,” என்று பெங்களூரில் உள்ள தக்காஷிலா கல்விக் கழகத்தின் இந்தோ-பசிபிக் கல்விப் பிரிவின் தலைவர் திரு மனோஜ் கேவல்ரமணி தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமர் மோடியும் அதிபர் ஸியும் சந்தித்துப் பேசியதை அடுத்து, இருநாடுகளுக்கிடையிலான பயண விசாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திபெத்தில் உள்ள புனிதத் தலங்களுக்குச் செல்ல இந்திய யாத்ரீகர்களுக்கு சீனா கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கியது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மலையோர எல்லைப்பகுதிகளில் மூன்று வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
சீனாவின் உயர் அரசதந்திரி திரு வாங் யி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) இந்தியாவுக்கும் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திரு வாங், ஆகக் கடைசியாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.