கியவ்: அமெரிக்க அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28 கோபக்கனல் வீசும் விவாதத்தில் அதிபர் டிரம்ப், உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் ஈடுபட்டதை அடுத்து உக்ரேனிய மக்கள் தங்கள் நாட்டு அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புட்டினை அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்கொள்ளும் விதத்தைக் குறித்து நேரடியாக தமது அதிருப்தியை வெளிப்படுத்திய உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய அதிபருடன் எவ்வித சமரசமும் செய்துகொள்ள வேண்டாம் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த திரு டிரம்ப், திரு ஸெலென்ஸ்கியின் போக்கு மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், இதுவரை அமெரிக்கா அளித்துள்ள ராணுவ உதவிக்கு அவர் நன்றியுணர்வு காட்டவில்லை என்றும் ஸெலென்ஸ்கி மீது குற்றம் சாட்டினார்.
“ஸெலென்ஸ்கி விட்டுக்கொடுத்துப் போய்விடக்கூடியவர் அல்ல என்பதை டிரம்ப் இப்பொழுது உணர்ந்திருப்பார்,” என்று உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் பேசிய மில்லா என்ற தமது முழுப் பெயரைக் குறிப்பிட விரும்பாத, மனிதவள மேலாளர் கருத்துரைத்தார்.
“உக்ரேன் ஒன்றும் மூன்றாம் உலகப் போர் குறித்து பந்தயமாடவில்லை, நம்மை பகடைக்காயாக வைத்து மற்றவர்கள் விளையாடுகின்றனர்,” என்று வர்த்தக ஆலோசகரான ஒக்சானா என்பவர் குறிப்பிட்டார்.
இவர்கள் தவிர உக்ரேனிய அதிகாரிகள், மற்ற பிரபலமான நபர்கள் ஆகியோரும் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்தனர்.