இங்கிலீஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்துப் போட்டிகளைச் சிங்கப்பூர் ரசிகர்கள் கண்டுகளிக்க ஆண்டுச் சந்தா திட்டத்தின் விவரங்களை ஸ்டார்ஹப் நிறுவனம் வியாழக்கிழமை (மே 21) வெளியிட்டது.
இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதிமுதல் இத்திட்டம் ரசிகர்களுக்கு அமலாகும். ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்களுக்கு $238 எனவும் அந்நிறுவன வாடிக்கையாளர் அல்லாதோருக்கு $380 எனவும் கட்டணம் வகுக்கப்பட்டது.
‘பிரீமியர்+ ஏனுவல் பாஸ்’(Premier+ Annual Pass) என அழைக்கப்படும் அத்திட்டப்படி, இங்கிலாந்தின் தலைசிறந்தக் குழுக்களை மிகவும் விரும்பித் தொடரும் உள்ளூர்க் காற்பந்து ரசிகர்களுக்குக் கட்டணம் கவர்ச்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ஹப் நிறுவனத்தின் தற்போதைய ‘இபிஎல்’ காற்பந்தாட்டத் தொகுப்புத் திட்டப்படி, இரு தேர்வுகளின் மாதச் சந்தா $40.74 முதல் $69.90 வரை வசூலிக்கப்படுகிறது. சிங்டெல் வாடிக்கையாளர்கள் ஆட்டங்களைக் காணவிரும்பினால், பகிர்வு ஏற்பாட்டின்கீழ் அவர்கள் $69.90 கட்டணமாகச் செலுத்துகின்றனர்.
முன்னாள் இபிஎல் காற்பந்து ஆட்டக்காரர்கள்
ஸ்டார்ஹப் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இத்திட்டங்கள் வெளியிடப்பட்டபோது, ‘இபிஎல்’ அமைப்பின் சிறப்பு வருகையாளர்களாக முன்னாள் ஆட்டக்காரர்களான மான்செஸ்டர் புனைடெட் குழுவின் நிமெஞ்சா விடிச், செல்சி குழுவின் ஜோ கோல் இருவரும் இருந்தனர்.

