பேங்காக்: கடந்த ஜூலை மாதம் ஐந்து நாள்கள் நீடித்த மோசமான மோதலைத் தொடர்ந்து தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட சில நாள்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) கம்போடிய எல்லைக்கு அருகே தனது ராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடியில் காயமடைந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் சுரின் மாகாணத்தில் உள்ள தா மோன் தாம் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் வழக்கமான எல்லைப் பாதையில் சுற்றுக்காவல் சென்றபோது, கண்ணிவெடியை மிதித்ததில் அந்த வீரரின் இடது கணுக்கால் பலத்த காயமடைந்ததாக தாய்லாந்து ராணுவம் ஓர் அறிக்கையில் கூறியது.
அந்த ராணுவ வீரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், கண்ணிவெடிகளுக்கு எதிரான ஒட்டாவா மாநாடு போன்ற அனைத்துலக ஒப்பந்தங்களையும் மீறியதற்கான தெளிவான சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது என்று தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் விந்தாய் சுவாரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எல்லையில் சுற்றுக்காவல் பணிகளின்போது தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடிகளால் காயமடைவது சில வாரங்களில் இது நான்காவது முறையாகும். கடந்த சனிக்கிழமை, தாய்லாந்தின் சிசாகெட், கம்போடியாவின் பிரியா விஹார் மாகாணங்களுக்கு இடையிலான பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.
இதற்கு முன்பு நடந்த இரண்டு சம்பவங்கள் அரசதந்திர உறவுகள் பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்ததுடன் மேலும் மோதல்களைத் தூண்டின.
ஜூலை 16, ஜூலை 23 ஆகிய தேதிகளில் தாய்லாந்து எல்லைப் பகுதியில் கம்போடியா கண்ணிவெடிகளை வைத்ததாகவும், இதனால் வீரர்கள் காயமடைந்ததாகவும் பேங்காக் குற்றம் சாட்டியது.
புதிய கண்ணிவெடிகள் எதையும் தான் வைக்கவில்லை என்று புனோம் பென் தெரிவித்தது. வீரர்கள் வகுக்கப்பட்ட பாதைகளை விட்டு விலகிச் சென்றபோது, பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த போரில் எஞ்சியிருந்த பழைய கண்ணிவெடிகளைத் தூண்டிவிட்டதாக அது கூறியது. தாங்கள் ஒட்டாவா மாநாட்டிற்கு பெருமைசேர்க்கும் அரசாங்கக் கட்சி என்று கம்போடியா சனிக்கிழமை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 24ஆம் தேதி தொடங்கிய அண்மைய மோதல்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான மிக மோசமான சண்டையாகும். பீரங்கி மற்றும் போர் விமானங்களின் தாக்குதல்களும் இதில் அடங்கும். இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் என்றும் இரு தரப்பிலும் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்பட்டது.
ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பார்வையாளர்கள் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்ய அனுமதிக்க, தாய்லாந்து மற்றும் கம்போடியா கடந்த வாரம் ஒப்புக்கொண்டதிலிருந்து, போர் நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.