வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அடுத்தடுத்த வரி விதிப்பு அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் செம்புக்கும் (காப்பர்) 50 விழுக்காடு வரி விதிக்கப்போவதாகக் கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரைமின்கடத்தி, மருந்துப் பொருள்கள் மீதான வரியும் விரைவில் வரவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா உட்பட 14 வர்த்தகப் பங்காளி நாடுகளுக்கு வரி விதிப்பு கடிதங்களை அனுப்பி பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதற்கு மறுநாளே செம்பு மீதான வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரேசில், இந்தியா மற்றும் இதர பிரிக்ஸ் கூட்டணி உறுப்பு நாடுகளின் பொருள்களுக்கு பத்து விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.
இவ்வேளையில் ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகியவற்றுடன் வர்த்தகப் பேச்சு சிறப்பாக நடந்து வருவதாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு கடிதத்தை அனுப்ப ஒரு சில நாள்களே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது திரு. டிரம்ப் வரி விதிப்பு தொடர்பான கருத்துகளை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
உலகின் ஆகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அவர் விதித்துள்ள அல்லது அச்சுறுத்தும் வரிகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்தில் மேலும் நிச்சயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.
மின்சார வாகனங்கள், ராணுவ வன்பொருள், மின் கம்பிகள் உட்பட பல பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிக்க செம்பு மிக முக்கிய மூலப்பொருளாகும். அதன்மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து செம்புகளின் பங்கு மதிப்பு 10 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது.
எஃகு, அலுமினியம் மற்றும் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வில் தற்போது செம்பும் சேர்ந்துள்ளது.