கோலாலம்பூர்: அண்மையில் நடந்துமுடிந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததைத் தொடர்ந்து, ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் மாநிலத் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) இரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திரு லோக் பேசினார். நெகிரி செம்பிலான் மாநிலக் கிளையை வழிநடத்தப் புதிய தலைமை பொறுப்பேற்பதற்கு இது பொருத்தமான தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.
நடந்துமுடிந்த தேர்தலில் ஜனநாயகச் செயல் கட்சி தனது ஒன்பது தொகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டாலும் 2004ஆம் ஆண்டைவிடக் கட்சியின் நிலைமை இப்போது வலுவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 22 ஆண்டுகளாக மாநிலத் தலைவராகச் சேவையாற்றிவிட்டதால் பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைப்பது தமது தனிப்பட்ட முடிவு என்றும் இதில் யாருடைய நெருக்குதலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
திரு லிம் குவான் எங் உட்பட மத்திய செயற்குழுத் தலைவர்கள் பலர் தம்மைத் தலைவர் பொறுப்பில் தொடருமாறு கேட்டுக்கொண்டபோதிலும் புதிய தலைமை உருவாக்கத்துக்கு வழிவிடும் வகையில் இம்முடிவை எடுத்ததாகத் திரு லோக் கூறினார்.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சருமான திரு லோக், சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற தேர்தலில் சென்னா தொகுதியில் மலேசியச் சீனர் சங்க வேட்பாளர் சியாவ் கோங் சூனிடம் 688 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
எனினும், கட்சியின் உயர் தலைமையின் முழு ஆதரவோடு தலைமைச் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றி, அந்தப் பொறுப்பில் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில், தற்போதைய நாடாளுமன்றத் தவணைக்காலம் முடியும் வரை மலேசிய அரசாங்கத்தில் ஜனநாயகச் செயல் கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
இது தொடர்பான தீர்மானத்தின் மீது வாக்களித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் 4,000க்கும் மேற்பட்ட கட்சிப் பேராளர்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய செயற்குழு இதில் எந்தவொரு அதிகாரபூர்வ நிலைப்பாட்டையும் திணிக்காது என்றும் திரு லோக் கூறினார்.

