மாலே: இஸ்ரேலியக் கடப்பிதழ் வைத்திருப்போர் மாலத்தீவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அதுதொடர்பான அறிவிப்பை மாலத்தீவு அதிபர் அலுவலகம் புதன்கிழமையன்று (ஏப்ரல் 16) வெளியிட்டது.
அதில், காஸா போரில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுவருவதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுக்கு வரத் தடை விதிக்கும் வகையில் அந்நாட்டுக் குடிநுழைவுச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் முகமது முய்சு ஒப்புதல் அளித்ததாகவும் மாலத்தீவு அதிபர் அலுவலகம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து இழைத்துவரும் அநீதிக்கும் இனப்படுகொலைக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் மாலத்தீவு அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை அந்தச் சட்டத்திருத்தம் பிரதிபலிப்பதாக அது கூறியது.