இந்தோனீசியாவில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்; பலர் கைது

இந்தோனீசியாவில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்; பலர் கைது

2 mins read
7311704d-7886-41f3-b3ca-e03c7314de00
சுரபாயாவில் மாணவர் ஒருவர் தீமூட்டப்பட்ட பெட்டியை கலவரத் தடுப்புக் காவல்துறையினர்மீது வீசினார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

சுரபாயா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் கொள்கைகளை எதிர்த்துப் பலர் அந்நாட்டின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான சுரபாயாவில் பேரணி நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்தோனீசியக் காவல்துறையினர் பலரைக் கைது செய்திருப்பதாக உரிமைக் குழு ஒன்று சனிக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தது.

எரிபொருள் விலை உயர்வு, இலவச உணவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு

எரிபொருள் விலை உயர்வையும் திரு பிரபோவோவின் முக்கியத் திட்டமான இலவச உணவுத் திட்டத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த கிட்டத்தட்ட 100 பேர் சுரபாயாவில் உள்ள அரசாங்கக் கட்டடத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை திரண்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் கணித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினர்மீது கற்களை வீசியதையும் சாலையின் நடுவே குப்பைக்குத் தீமூட்டியதையும் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவர்களைக் கைது செய்ததைச் செய்தியாளர்கள் பார்த்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டதாகக் கொன்ட்ராஸ் சூராபாயா உரிமைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஃபாட்குல் கொயர், சனிக்கிழமை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். காவல்துறையினர் அவர்களிடம் சனிக்கிழமை அதிகாலை 3.30 விசாரணை நடத்தியதாகவும் அதேவேளை அவர்கள்மீது குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடும் நடவடிக்கை

ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் பொருள்களை வீசியதால் அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர, கடும் நடவடிக்கைகளைத் தாங்கள் எடுத்ததாகச் சுரபாயா காவல்துறைத் தலைவர் லுத்ஃபீ சுலிஸ்தியாவான் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) பின்னிரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

திரு பிரபோவோவின் அரசாங்கம், சலுகை விலையில் வழங்கப்படாத எரிவாயுவின் விலையை 30 விழுக்காடு உயர்த்திய பிறகு இந்தோனீசியாவின் பல நகரங்களில் இம்மாதம் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. மத்திய கிழக்குப் பூசலால் உலக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்ய அந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

எரிபொருள் விலை உயர்வை எதிர்த்தும் பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புள்ள இலவச உணவுத் திட்டத்தை நிறுத்துமாறு குரல் கொடுத்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இலவச உணவுத் திட்டம், திரு பிரபோவோவின் அரசியல் கொள்கையில் ஆக முக்கியமானதாக விளங்குகிறது. அதேவேளை அது, பல நச்சுணவுச் சம்பவங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவிட்டதாகவும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அத்திட்டம் சில இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்