கோலாலம்பூர்: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள். அவர்களில் பலர் கறுப்பு உடை அணிந்திருந்தனர்.
அந்தப் பேரணியில் எதிர்க்கட்சியினரும் ஆளும் கூட்டணியின் ஒரு பிரிவினரும் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் பின்னர் ஊடகங்களிடம் கூறினர்.
கோலாலம்பூர் எல்ஆர்டி நிலைம் அருகே உள்ள சோகோ கடைத்தொகுதியின் வெளியில் இருந்து மெர்டேக்கா சதுக்கம் வரை ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தூரம் அந்தப் பேரணி சென்றது.
நாட்டில் ஊழலைத் துடைத்தொழிக்கவும் சீர்திருத்தப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பிரதமர் அன்வார் இப்ராகிமை வலியுறுத்தி பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஊழலுக்கு எதிரான மக்கள் செயலகம் என்ற அமைப்பு அந்தப் பேரணியில் 50 அமைப்புகளைப் பங்கேற்கச் செய்யத் திட்டமிட்டு இருந்தது.
மலேசியாவில் இவ்வாண்டு நடைபெற்று இருக்கும் முதல் பேரணி இது. பேரணி முடிவில் ஏறத்தாழ 200 பேர் இருந்ததாக ஊடகச் செய்திகள் கூறின.
தாம் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் தமது ஆட்சியில் லஞ்ச ஊழல் சம்பவம் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்திய திரு அன்வார், அது தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதில் தமக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் அவ்வாறு கூறியதற்கு மறுநாள் ஊழல் எதிர்ப்புப் பேரணியுடன் போராட்டம் நிகழ்ந்துள்ளது.