போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து ஆண்டனி லோக் விலகல்

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து ஆண்டனி லோக் விலகல்

படம்: ஃபிரி மலேசியா டுடே

10 Nov 2026 - 7:45 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் சியூ ஃபூக், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) முதல் வீட்டுக் காவலில் கழிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திரு லோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 டிசம்பர் முதல் போக்குவரத்து அமைச்சை வழிநடத்தும் பொறுப்பைத் தமக்கு வழங்கியதற்காகப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“போக்குவரத்து அமைச்சுக்கு நான் தலைமை வகித்த காலத்தில், அதன் மூத்த நிர்வாகத்தினர், பணியாளர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கும் ஒத்துழைப்பிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“எனக்குப் பின் பொறுப்பேற்பவரிடம் பணிகளைச் சுமுகமாக ஒப்படைக்க நான் முழு ஒத்துழைப்பை வழங்குவேன். இதன் மூலம் அமைச்சின் அனைத்துப் பொறுப்புகளும் முன்னெடுப்புகளும் மக்களுக்காகத் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வேன்,” என்று திரு லோக் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம், திரு லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், திரு நஜிப் வீட்டுக் காவலில் தனது எஸ்ஆர்சி சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிய பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார்.

திரு நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு திரு லோக் தனது ராஜினாமாவை அளித்திருந்தார். ஆனால் திரு நஜிப் விடுவிக்கப்படும் வரை தனது கடமைகளைத் தொடருமாறு பிரதமர் அன்வார் அவரை வலியுறுத்தினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, தற்போதைய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப்பிற்கு மேலும் ஒரு நிபந்தனை மன்னிப்பு வழங்கினார். அதன்படி, அவர் தமது தண்டனையின் மீதமுள்ள காலத்தை 2028, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்பட்டார்.

திரு நஜிப் அபராதத்தைச் செலுத்துவது, விதிக்கப்பட்ட மற்ற அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு இது உட்பட்டிருந்தது.

கடந்த வாரம், ஒரு மக்கள் நிதி திரட்டும் முயற்சியைத் தொடர்ந்து, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்திவிட்டதாக அம்னோ கட்சி அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்
நஜிப் ரசாக்உயர் நீதிமன்றம்நிபந்தனைமன்னிப்பு