நீண்டகால நட்பை வளர்க்க அன்வார், மோடி சூளுரை: ஆழமடைந்த உறவு

நீண்டகால நட்பை வளர்க்க அன்வார், மோடி சூளுரை: ஆழமடைந்த உறவு

2 mins read
e9f64ace-e6e2-4cd3-a1eb-734cc1702026
இந்தியப் பிரதமர் மோடியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றனர். - படம்: ஃபத் ரிஸால்/ மலேசியப் பிரதமர் அலுவலகம்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இந்தியப் பிரதமர் மோடியும் நம்பிக்கை அடிப்படையில் வேரூன்றிய நீண்டகால நட்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல சூளுரைத்தனர். இது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

வணிகம், தொடர்புத் துறை, உணவுப் பாதுகாப்பு, மின்னிலக்க தொழில்நுட்பம், தற்காப்பு உள்ளிட்ட பல துறைகளில் உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன.

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார். 2026ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இது.

மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவது புதுடெல்லியின் நோக்கமாகும். உலகின் நிச்சயமற்ற சூழ்நிலையில் அதன் பொருளியல் உத்தியையும் பங்காளித்துவத்தையும் விரிவுபடுத்த இந்தியா முயன்று வருகிறது.

புத்ரஜெயாவில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அன்வார் இப்ராகிம், இரு தரப்பு வர்த்தகம் கடந்தகால சாதனைகளையும் தாண்டி மேலும் வளரும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

2025ல் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 18.59 பில்லியன் டாலர் என சாதனை அளவாகப் பதிவானது.

கிழக்கு மலேசிய மாநிலமான சாபாவில் புதிய தூதரகத்தைத் திறக்கத் திட்டமுள்ள இந்தியாவுக்கு மலேசியா ஆதரவுகளை வழங்கும் என்றும் திரு அன்வார் கூறினார்.

இரு தலைவர்களும் வட்டார, அனைத்துலகப் பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடினர். இதில், உக்ரேன் போர், காஸா உள்ளிட்ட மத்திய கிழக்கு பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது.

“இது, வழக்கமான அரசதந்திர உறவல்ல. அதையும் தாண்டி நம்பிக்கை, புரிந்துணர்வு அடிப்படையில் உருவான உண்மையான நண்பர்களுக்கிடையிலான கலந்துரையாடல்,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையே வளர்ந்து வரும் நெருக்கமான பண்பாட்டு உறவுகள், புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய திரு மோடி, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவு, உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

அரசதந்திர வழிகளில் அமைதியை மேம்படுத்தும் உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க இரு நாடுகளும் உறுதி தெரிவித்துள்ளன.

திரு மோடியின் வருகை இரு நாடுகளுக்கு இடையே ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி, மின்னிலக்க ஒத்துழைப்பு, ஊழலை எதிர்த்துப் போராடுதல், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறிப்புகள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின.

முன்னதாக சனிக்கிழமை மாலை மலேசியா வந்த திரு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் அன்வார் இப்ராகிம் நேரில் வந்து அவரை வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்