காட்டுத் தீ பிரச்சினை குறித்து அன்வார், பிரபோவோ பேச்சு

காட்டுத் தீ பிரச்சினை குறித்து அன்வார், பிரபோவோ பேச்சு

1 mins read
96687ac1-e06e-42b0-ac1f-aa00dc570ce7
புதுடெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் மாநாட்டின் இடையே, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் (இடது) மலேசியப் பிரதமர் அன்வார் (வலது) பேச்சு நடத்தினார். நடுவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, எகிப்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சமே ஷுக்ரி. - படம்: மலேசியா-சீனா இன்சைட்

புதுடெல்லி: காட்டுத் தீ பிரச்சினை, ஈரான் போர் பதற்றங்கள் குறித்து மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவும் சனிக்கிழமை (செப்டம்பர் 12) ஆலோசித்தனர்.

புதுடெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இச்சிக்கல்களுக்குக் கூட்டு நடவடிக்கைகளும் ஒருமித்த கருத்துமே அவசியம் என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் இரவு விருந்தின்போது அதிபர் பிராபோவோவிடம் பேசிய திரு அன்வார், நிலுவையிலுள்ள இருதரப்பு விவகாரங்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, மலேசியாவிற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை மீண்டும் நினைவூட்டினார்.

இந்தோனீசியாவின் கலிமந்தான், சுமத்ரா பகுதிகளில் நிலவும் கடுமையான காட்டுத் தீயின் புகையானது, மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளைப் பாதித்து வருகிறது.

மலேசியாவின் ஐந்து காற்றுத் தரம் கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு எண் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) பிற்பகல் நிலவரப்படி சரவாக்கின் செரியான் பகுதியில் அது அதிகபட்சமாக 178 ஆகப் பதிவாகியுள்ளது. சரவாக்கின் மேலும் மூன்று பகுதிகளிலும் சிலாங்கூரின் ஜோகான் செட்டியாவிலும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற எல்லைக்குள் உள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் 55 நிலையங்கள் மிதமான காற்றுத் தரத்தையும், 8 பகுதிகள் நல்ல காற்றுத் தரத்தையும் பதிவு செய்துள்ளன.

பிரதமர் அன்வார் தமது இந்தியப் பயணத்தின் அடுத்த கட்டமாக கேரளா செல்லவுள்ளார். திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அவர் மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீசரவாக்அன்வார்பிரபோவோ சுபியாந்தோஉலகம்மலேசியாஇந்தோனீசியாபுகைமூட்டம்