தவறான சொல்லைப் பயன்படுத்தியதற்கு இந்தியச் சமூகத்திடம் மன்னிப்புக்கேட்ட அன்வார்

இந்தியச் சமுதாயத்தின் விவகாரங்கள், பிரச்சினைகள் இனி அன்வாரின் நேரடி கண்காணிப்பில்

தவறான சொல்லைப் பயன்படுத்தியதற்கு இந்தியச் சமூகத்திடம் மன்னிப்புக்கேட்ட அன்வார்

2 mins read
41a9db00-0a1c-4643-9084-aa01e9aa6b9f
நெகரி செம்பிலான், டேசா செம்பாக்கா இரவுச் சந்தைத் திடலில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிறப்புரையாற்றினார். - படம்: பெர்னாமா
multi-img1 of 2

சிரம்பான்: இந்தியச் சமூகம் தொடர்பாகத் தவறான சொல்லைப் பயன்படுத்தியதற்காக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்பு மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தாம் பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தியதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

சிரம்பானில் புதன்கிழமை (ஜூலை 29) இரவு நடைபெற்ற இந்தியச் சமூகத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் பிரதமர் பேசினார்.

“கோயிலை ‘கோயில் ஹராம்’ (kuil haram) என நான் சொல்லியிருந்தால், அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு தொழில்நுட்பக் குறைபாடுதான். அந்தத் தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

“பிரதமரும் ஒரு மனிதர்தான். நோக்கம் சரியாக இருந்தாலும் தவறான சொல்லைப் பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது.

“தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்பதால் ஒரு தலைவர் பலவீனமானவர் ஆகிவிடமாட்டார். அது நேர்மையையே காட்டுகிறது,” என்றார் அவர்.

ஆனால், தமது அரசாங்கம் பழையக் கோயில்களை இடித்ததில்லை என்றும் நீதியுடன் ஆட்சி நடத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்தியச் சமுதாயத்தின் விவகாரங்கள், பிரச்சினைகளை இனித் தாமே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாகவும் திரு அன்வார் அறிவித்தார்.

இந்தியச் சமூக மக்களிடமிருந்து பெறப்பட்ட எண்ணற்ற கோரிக்கைகள், புகார்களின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

மலேசியா அனைத்து இன மக்களுக்கும் உரிய நாடு என்று வலியுறுத்திய அவர், இன ரீதியான உணர்வுகளை யாரும் தூண்டக்கூடாது என்றார்.

“சீன வம்சாவளியினரைச் சீனாவுக்கும் இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கும் திரும்புமாறு கூறி, யாரும் இன உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

“நான் ஒரு முஸ்லிம்; இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்த எனக்குக் கற்றுத்தரப்படவில்லை. நான் ஒரு மலாய் இனத்தவர்; இந்தியச் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கவோ சீனச் சமூகத்தை ஒடுக்கவோ என் பெற்றோர் எனக்குக் கற்றுத்தரவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

இனவாத அரசியல் பேச்சுகளையும் பிளவுப்படுத்தும் கருத்துகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசாங்கத்தைச் செயல்களின் மூலமே மதிப்பிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் ஆக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்பது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று நிகழ்ச்சியில் பேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறினார்.

அரசாங்கத்தின் சாதனைகளைக் கண்டு இந்தியச் சமூகம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசிய இந்தியச் சமூக மேம்பாட்டுப் பிரிவிற்கான (மித்ரா) நிதி ஒதுக்கீடு $150 மில்லியனாக உயர்த்தப்பட்டது, ஆறு புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட்டது, 10,000க்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டது ஆகியவை அரசாங்கத்தின் சாதனைகளில் சிலவாகும் என்று ரமணன் சுட்டினார்.

நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஅன்வார் இப்ராகிம்அன்வார்மன்னிப்புஇந்துஇந்தியர்முஸ்லிம்இஸ்லாம்சமூகம்இந்தியச் சமூகம்