தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய நகரத் திட்டத்தைத் துரிதப்படுத்த அன்வார் கோரிக்கை

2 mins read
52834676-c42a-4d62-b513-69980048fc26
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புத்ராஜெயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 30ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) உரையாற்றினார். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், கோத்தா மடானி திட்டத்தைச் சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனைத் துரிதப்படுத்துமாறு புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் பரிந்துரைப்பதாக அவர் சொன்னார்.

நகரச் சீரமைப்புத் திட்டம் இந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் 26ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. மனிதநேயப் பண்புகள், நீடித்த நிலைத்தன்மை, தொழில்நுட்ப முன்னேற்றம் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தத் திட்டத்தை உருவாக்குவதே அதன் நோக்கம். அறிவார்ந்த நகரத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப அது நிறுவப்பட வேண்டும் என்று திரு அன்வார் தெரிவித்தார்.

 “ஓராண்டுக்கு முன்னர் கோத்தா மடானி திட்டத்தை முன்வைத்தேன். அரசாங்க அமைப்புகள் அனைத்தும் அவற்றின் ஒப்புதலை வழங்கி முழு ஆதரவைக் கொடுத்துள்ளன. இப்போது முழு வேகத்துடன் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் கைகளில்தான் உள்ளது,” என்றார் அவர்.

புத்ராஜெயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 30ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் மலேசியப் பிரதமர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) உரையாற்றினார்.

கோத்தா மடானி திட்டத்தின் மதிப்பு நான்கு பில்லியன் ரிங்கிட்.

இதற்கிடையே, மத்திய நிர்வாக நிலையமான புத்ராஜெயாவை வெளிநாட்டுத் தலைவர்கள் மெச்சியிருப்பதாகத் திரு அன்வார் கூறினார். அதன் அழகுக்காகவும் தனித்துவம் வாய்ந்த அடையாளத்துக்காகவும் தலைவர்கள் புகழாரம் சூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயா திட்டத்தைத் தொடங்கி அதனை உருவாக்கியதில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது ஆற்றிய பங்கைத் திரு அன்வார் பாராட்டினார்.

அரசாங்க ஊழியர்கள் தொடக்கத்தில் கோலாலம்பூரிலிருந்து புத்ராஜெயாவுக்கு மாறச் சற்று தயங்கியதாக அவர் சொன்னார். ஆனால் பள்ளிவாசல்கள், பள்ளிகள், உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள் உள்ளிட்ட வசதிகளைப் பார்த்த பிறகு, அவர்கள் இடம் மாறுவதில் ஆர்வம் காட்டியதைப் பிரதமர் அன்வார் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்