தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் நெருக்கடி தொடர்பில் ஆசியான் ஒற்றுமைக்கு அன்வார் வலியுறுத்தல்

1 mins read
பங்ளாதேஷுக்கு ஆதரவு வழங்க உறுதிகூறியுள்ளார்
9199a94a-a555-41a2-8766-34a77aca42b6
புத்ராஜெயாவில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் பங்ளாதேஷ் அரசாங்கத் தலைமை ஆலோசகர் டாக்டர் முகம்து யூனூசும் (வலம்) கூட்டறிக்கையை வெளியிட்டனர். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுதல், அகதிகள் நெருக்கடி விவகாரம் ஆகியவை மலேசியாவின் முன்னுரிமைகளில் அடங்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

குறிப்பாக, பேரெண்ணிக்கையில் புலம் பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தந்துள்ள பங்ளாதேஷுக்கு ஆதரவு வழங்குவதை அவர் குறிப்பிட்டார்.

வட்டார ஒத்துழைப்பில் மியன்மார் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமை தரும் வேளையில், அகதிகளுக்கும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கும் உடனடி மனிதநேய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.

“நியூயார்க், கத்தார், மலேசியாவில் பலதரப்புக் கருத்தரங்குகளை நடத்த முனைப்புடன் முயற்சி மேற்கொண்ட பங்ளாதேஷ் அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்,” என்றார் அவர்.

இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து நாட்டினரைச் சேர்ந்த குழுவுடன் ஒருங்கிணைந்து மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் அடுத்த சில வாரங்களில் மியன்மாருக்குச் செல்லவிருப்பதாகத் திரு அன்வார் குறிப்பிட்டார்.

மியன்மாரில் அமைதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண்பதும் இப்பயணத்தின் நோக்கம் என்றார் அவர்.

புத்ராஜெயாவில் பங்ளாதேஷ் அரசாங்கத் தலைமை ஆலோசகர் டாக்டர் முகம்து யூனூசுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது மலேசியப் பிரதமர் அவ்வாறு கூறினார்.

பேராசிரியர் முகமது யூனூஸ், ஆகஸ்ட் 11 முதல் 13ஆம் தேதி வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு மலேசியா சென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்