கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 12வது ஆசியான் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களின் சந்திப்பு (AFMGM) வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறவிருக்கிறது.
இச்சந்திப்பில், நெருக்குதலுக்கு உள்ளாக்கும் அமெரிக்க வரிகளைச் சமாளிக்கும் முறை தொடர்பில் ஆசியான் அமைச்சர்கள் இணக்கம் காண்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாள்களாக, அமைச்சர்கள், பொருளியலாளர்கள், மத்திய வங்கி அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி தென்கிழக்காசியா இந்த வர்த்தகப் போரில் வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளை அதிகரித்து, அதன் மூலமாக ஆசியானை வலுப்படுத்தி, அதன் பொருளியல் சுதந்திரத்தை அதிகரிக்க இது வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் பொருளியல் வளர்சிக்குப் பாதகமான சூழல் ஏற்பட்டுள்ள வேளையில், ஆசியான் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இன்றைய கூட்டத்தின் முடிவில் இதன் தொடர்பில் வலுவான நிலைப்பாட்டை எட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியானின் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஆசியான் நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கும் இணக்க அறிக்கையை இன்றைய கூட்டத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் நாடுகளின் தலைவர்கள் அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் வருடாந்தர உச்சிநிலை மாநாட்டில் சந்திக்கும்போது அந்த இணக்க அறிக்கை தொடர்பில் கவனமாகக் கலந்துரையாடி முடிவெடுப்பர்.
மலேசிய நிதியமைச்சர் அமீர் ஹம்சா, ஆசியான் நிதியமைச்சர்கள் சந்திப்புக்குத் தலைமை வகிப்பார். மலேசிய மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஷீது கஃபூர் ஆசியான் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.
தொடர்புடைய செய்திகள்
ஆசியான் நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், அனைத்துலக நிதி நிறுவனங்களைச் சேர்ந்தோர், தனியார் துறைப் பிரதிநிதிகள் என 300க்கும் மேற்பட்டோர் இந்த 12வது சந்திப்பிலும் முதலீட்டுக் கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவற்றிலும் கலந்துகொள்வர் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.